Skip to main content

பெண்ணின் திருமண வயது உயர்வு; கருத்து தெரிவிக்குமாறு மாணவிகள், இளம்பெண்களுக்கு ஜோதிமணி எம்.பி. அழைப்பு!

Published on 19/12/2021 | Edited on 19/12/2021

 

Increase in woman's marriage age;jothi Mani MP invite for students and young women to comment

 

கடந்த 2020- ஆம் ஆண்டு சுதந்திர தின உரையின்போது பிரதமர் நரேந்திர மோடி, பெண்ணின் திருமண வயதை 21 ஆக உயர்த்துவது குறித்துப் பேசினார். இதற்காக, பெண்ணின் திருமண வயதை அதிகரிக்க மத்திய அரசு குழு ஒன்றை அமைத்திருந்தது. ஆராய சமதா கட்சியின் முன்னாள் தலைவர் ஜெயா ஜேட்லி தலைமையிலான 4 பேர் அடங்கிய குழு, கடந்த 2020- ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பிரதமர் அலுவலகம் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்திடம் தன் அறிக்கையை சமர்ப்பித்தது. அதில், பெண்களின் திருமண வயதை 21 ஆக அதிகரிக்க வேண்டும் என, அக்குழு பரிந்துரைத்திருந்தது. 

 

இந்த நிலையில், கடந்த டிசம்பர் 16- ஆம் தேதி அன்று டெல்லியில் கூடிய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை, குழுவின் பரிந்துரையை ஏற்று பெண்ணின் திருமண வயதை 18- ல் இருந்து 21 ஆக உயர்த்துவதற்கு ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரிலே இதற்கான மசோதாவைத் தாக்கல் செய்து, மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றி, குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்கு பிறகு, மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டு, சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

 

மத்திய அரசின் முடிவுக்கு கல்லூரி மாணவிகள், இளம்பெண்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் ஆதரவும், எதிர்ப்புமாக பல்வேறு கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். 

 

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கரூர் தொகுதியின் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி எம்.பி. தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "தமிழகத்தில் உள்ள பெண்கள் குறிப்பாக, மாணவிகள், இளம்பெண்கள் கவனத்திற்கு, திருமண வயதைச் சட்டப்படி 21 ஆக உயர்த்துவது குறித்த உங்கள் கருத்தை எனது அலுவலக வாட்ஸ் அப் எண்ணிற்கு 944-218-2636 அனுப்புங்கள். உங்கள் கருத்தின் அடிப்படையில் நாடாளுமன்றத்தில் எங்கள் நிலைப்பாடு அமையும்" என்று குறிப்பிட்டுள்ளார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“காவிரி நீர் வேணுமா... ஈரோட்டில் கூட காவிரி ஓடுது பாருங்க...” - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பதிலால் எழுந்த விமர்சனம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'Oh Cauvery water...? Even in Erode, see the Cauvery running'- Criticism caused by EVKS Elangovan's response

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசுகையில், ''ஸ்டாலின் தலைமையில் அமைந்திருக்கின்ற கூட்டணி என்பது சாதி மதங்களைக் கடந்த கூட்டணி. மத வெறித்தனத்திற்கு அப்பாற்பட்ட கூட்டணி. மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும், எல்லா மதத்தைச் சார்ந்தவர்களும் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற ஒரு நல்ல கொள்கைக்காக தான் இந்த கூட்டணி இருக்கிறது.

மற்ற கூட்டணிகளை எடுத்துக் கொண்டால் குறிப்பாக பாஜக கூட்டணியில் இருக்கின்ற கூட்டணியாக இருந்தாலும் சரி, அதிமுக தலைமையில் இருக்கின்ற கூட்டணியாக இருந்தாலும் சரி அவர்கள் கொள்கைக்காக ஒன்று சேரவில்லை. சில கோடி ரூபாய் பேரம் பேசி பெறுவதற்காக அந்த கூட்டணியில் இருக்கிறார்கள்'' என்றார்.

அப்பொழுது செய்தியாளர் ஒருவர், 'ஒரு சொட்டு தண்ணீர் கூட தரமாட்டேன் என்று சொல்கின்ற காங்கிரசுக்கு பத்து சீட்டுகள் கொடுத்தது நியாயமா என சீமான் கேள்வி எழுப்பி உள்ளாரே' எனக் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த இளங்கோவன், ''இல்லை காங்கிரசினுடைய கொள்கையே ஒரு சொட்டு நீர் கூட கொடுக்கக் கூடாது என்பதுதான். மக்கள் குடிப்பதால் கெட்டுப் போயிருக்கிறார்கள். மக்களுடைய சிந்தை மாறி போயிருக்கிறது. அதனால் காங்கிரசை பொறுத்தவரை எங்களுடைய மகாத்மா காந்தியினுடைய கொள்கையே ஒரு சொட்டு மது தண்ணீர் கூட மக்களுக்கு கொடுக்கக் கூடாது என்பதுதான்'' என்றார்.

உடனே செய்தியாளர் 'காவிரி தண்ணீர்' என சொல்ல, ''காவிரி தண்ணீரா... காவிரி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஈரோட்டில் இருக்கின்ற காவிரி ஆற்றை பார்த்தீர்கள் என்றால் கூட, இன்னைக்கு பாருங்கள் இருக்கின்ற பாறை எல்லாம் மறைக்கும் அளவிற்கு தண்ணீர் போய்க் கொண்டிருக்கிறது. வேண்டிய அளவிற்கு தண்ணீர் தர கர்நாடகா தயாராக இருந்தாலும் அவர்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு இருக்கின்ற காரணத்தால் சில தடங்கல்கள் இருக்கிறது'' என்றார்.

காவிரி நீர் குறித்த கேள்விக்கு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கொடுத்த பதிலுக்கு சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

Next Story

விவேக் இல்லத் திருமணம்; அப்பாவின் கனவை நோக்கி மகள்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
vivek daughter marriage

பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் கடந்த 2021 ஆம் ஆண்டு உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு மூன்று குழந்தைகள் இருந்தன. பிரசன்னா குமார், அமிர்த நந்தினி மற்றும் தேஜஸ்வனி. இதில் பிரசன்னா குமார், மூளைக் காய்ச்சல் காரணமாக 2015 ஆம் ஆண்டு உயிரிழந்தார்.

இந்த நிலையில், மறைந்த விவேக்கின் மூத்த மகளான தேஜஸ்வினிக்கு தற்போது திருமணம் நடைபெற்றுள்ளது. பரத் என்பவரைத் திருமணம் செய்து கொண்ட நிலையில், திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். 

அப்போது மணமக்கள் இருவரும் மரக்கன்றுகள் மற்றும் மூலிகை பூச்செடிகள் நட்டனர். பின்பு வாழ்த்தியவர்களுக்கு மரக்கன்றை பரிசாக அளித்தனர். விவேக், முன்னாள் குடியரசுத் தலைவர் மறைந்த ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் வழியில் கிரீன் கலாம் என்ற திட்டத்தின் மூலம் 1 கோடி மரக்கன்றுகள் நடுவதை கனவாக வைத்திருந்தார் என்பதும் அதில் லட்சக்கணக்கான மரக்கன்றுகளை நட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.