காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை காரணமாக, ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், சுற்றுலா பயணிகள் ஆற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த பத்து நாள்களுக்கும் மேலாக நீர் வரத்து கணிசமாக அதிகரித்து வருகிறது. கர்நாடகா மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து உயர்ந்துள்ளது.
மே 15 மற்றும் 16ம் தேதிகளில், நீர்வரத்து வினாடிக்கு 6000 கன அடியாக இருந்தது. மே 17ம் தேதி காலை நிலவரப்படி, 25 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது. இதனால் ஒகேனக்கல் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அங்குள்ள முதன்மை அருவி, ஐந்தருவி, சினிமா அருவி பகுதிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலா பயணிகளுக்கு முதன்மை அருவியில் குளிப்பதற்கும், காவிரி ஆற்றில் பரிசல் சவாரி செய்யவும் தடை விதித்து மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி உத்தரவிட்டுள்ளார். மறு உத்தரவு வரும் வரை இந்த தடை நீடிக்கும் என அறிவித்துள்ளார்.
ஒகேனக்கல்லுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதை அடுத்து, மேட்டூர் அணைக்கும் நீர் வரத்து உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் வினாடிக்கு 8030 கன அடியாக இருந்த நீர்வரத்து, புதன்கிழமை (மே 18) காலை 9546 கன அடியாக உயர்ந்தது. அணையில் இருந்து குடிநீர் பயன்பாட்டுக்காக வினாடிக்கு 1500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. தண்ணீர் திறப்பைக் காட்டிலும் நீர் வரத்து அதிகமாக இருப்பதால், அணை நீர்மட்டமும் கணிசமாக உயர்ந்து வருகிறது.
அதன்படி, நேற்று முன்தினம் அணை நீர்மட்டம் 108.45 அடியாக இருந்த நிலையில், புதன்கிழமை காலை அணை நீர் மட்டம் 109.45 அடியாக உயர்ந்தது. கடந்த மூன்று நாள்களில் அணை நீர்மட்டம் 1.31 அடி உயர்ந்துள்ளது. மேட்டூர் அணையில் நீர் இருப்பு 77.63 டிஎம்சி ஆக உள்ளது. நீர்மட்டம் இதே நிலையில் உயரும்பட்சத்தில் டெல்டா பாசனத்திற்காக வழக்கம்போல் ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட வாய்ப்பு உள்ளது.