தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 15ஆம் தேதி (15.10.2024) தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இதனிடையே வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாகத் தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள வானிலை முன்னெச்சரிக்கை அறிவிப்பில், “திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய 3 மாவட்டங்களில் இன்று (12.12.2024) அதி கனமழைக்கான வாய்ப்பு உள்ளது. இதனால் இந்த 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக மழை பொழிந்து வருகிறது. இந்நிலையில் திருவள்ளூர் மற்றும் சென்னைக்கு குடிநீர் வழங்குவதில் முக்கிய ஏரியாக விளங்கும் பூண்டி ஏரியில் பிற்பகல் ஒரு மணியிலிருந்து நீரின் வரத்து அதிகரித்தது. முன்னதாக வினாடிக்கு 3,500 கன அடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில் மொத்தம் 35 அடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியின் நீர் இருப்பு 34.5 அடியை எட்டியுள்ளது.
தொடர் நீர்வரத்து காரணமாக பூண்டி ஏரி நிரம்பும் தருவாயை எட்டியுள்ளது. இந்நிலையில் தற்போது வினாடிக்கு 5,890 கன அடி நீரானது பூண்டி ஏரிக்கு வந்து கொண்டிருக்கிறது. இதனால் பொதுப்பணித்துறை அதிகாரிகளின் முடிவு படி பூண்டி ஏரியில் இருந்து 5,000 கனஅடி நீரானது திறந்து விடப்பட்டுள்ளது. கொசஸ்தலை ஆறு வழியாக 40க்கும் மேற்பட்ட கிராமப்பகுதிகளை கடந்து சென்று எண்ணூர் கடலில் இந்த நீர் கலக்க இருக்கிறது. எனவே 40-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்ததால் நீரின் வெளியேற்றம் அதிகபட்சமாக 10,000 முதல் 12,000 கன அடி வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. எனவே தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டுள்ளது.