நாடாளுமன்றத்தில் பாகுபாடற்ற முறையில் செயல்படுவதாகக் கூறி மாநிலங்களவை தலைவர் ஜக்தீப் தன்கருக்கு எதிராக இந்தியா கூட்டணி நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்து நேற்று முன்தினம் (10-12-24) நோட்டீஸ் அளித்தன. இது தொடர்பாக, தற்போது நடைபெற்று நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரில் விவாதம் நடைபெற்று வருகிறது.
அப்போது நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, ‘எதிர்க்கட்சி எம்.பிக்கள் அனைவரும் நாடாளுமன்றத்தில் இருக்க தகுதியற்றவர்கள்’ என்று தெரிவித்தார். மேலும் அவர், ‘நாற்காலியை மதிக்க முடியவில்லை என்றால் இந்த அவையில் நீங்கள் உறுப்பினராக இருக்க உங்களுக்கு உரிமை இல்லை’ என எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். மத்திய அமைச்சரின் இந்த பேச்சுக்கு எதிர்க்கட்சி எம்.பிக்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜுவுக்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி சகரிகா கோஸ் சிறப்புரிமை தீர்மானம் கொண்டு வந்தார். அந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 60 எதிர்க்கட்சி எம்.பிக்கள் ஆதரவாக கையெழுத்திட்டுள்ளனர். இது குறித்து சகரிகா கோஸ் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியதாவது, “நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, நாடாளுமன்றத்தை சுமுகமாக நடத்தி செல்வதற்குப் பதிலாக தொடர்ந்து எதிர்க்கட்சிகளை அவமதித்தே வருகிறார்.
நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் அவர் எதிர்க்கட்சி உறுப்பினர்களை அவமதித்து வருகிறார். இது அவர் வகிக்கும் உயர் பதவிக்கு முற்றிலும் பொருந்தாத செயலாகும். மேலும், அவர் தனது பதவியை தவறாகப் பயன்படுத்தி வருகிறார்” என்று கூறினார்.