Skip to main content

“சர்வதேச மாநாட்டில் எனது முகத்தை மறைக்க முயற்சிக்கிறேன்” - மத்திய அமைச்சர் வேதனை

Published on 12/12/2024 | Edited on 12/12/2024
 Union Minister Nithin gadkari says Trying to hide his face in international conference

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த நவம்பர் 25ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடர் டிசம்பர் 20ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. எதிர்க்கட்சிகள் சார்பில் அதானி மீதான குற்றச்சாட்டு, மணிப்பூர் விவகாரம், ஃபெஞ்சல் புயல் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு அனுமதி மறுக்கப்படுவதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. 

அந்த வகையில், இன்று (12-12-24) சாலை பாதுகாப்பு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய மத்தியப் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி பேசியதாவது, “சாலை விபத்து குறித்து சர்வதேச மாநாட்டில் கலந்துகொள்ளும் போது, நான் எனது முகத்தை மறைக்க முயற்சி செய்கிறேன். விபத்துகளின் எண்ணிக்கையைக் குறைப்பதை மறந்து விடுங்கள். ஆனால், விபத்துக்கள் அதிகரித்துள்ளது என்பதை ஒப்புக்கொள்ள எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. 

சமூக அக்கறையின்மை, போக்குவரத்து விதிகளைக் கடைப்பிடிக்காதது, உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாதது தான் இந்த சம்பவங்களுக்கு காரணம். மனித நடத்தையில் மாற்றம் ஏற்பட வேண்டும், சமூகம் முன்னேற வேண்டும் மற்றும் சட்டத்தின் விதிகளை அனைவரும் மதிக்க வேண்டும். முறையற்ற டிரக் பார்க்கிங், மோசமான லேன் போன்ற குறிப்பிட்ட சிக்கல்கள் தான், விபத்துகளுக்கு முக்கிய பங்களிக்கிறது. பேருந்து தயாரிப்பில் சர்வதேச பாதுகாப்பு தரங்களைக் கட்டாயமாக்கியுள்ளோம். அவசரகால ஜன்னல்களை உடைப்பதற்குப் பேருந்துகளில் சுத்தியல் பொருத்துதல் உள்ளிட்டவைகளை கட்டாயப்படுத்தியுள்ளோம். 

நிதி ஆயோக் மற்றும் எய்ம்ஸ் அறிக்கையின்படி விபத்து மரணங்களில் 30 சதவீதம் பேர் அவசர மருத்துவச் சிகிச்சை இல்லாததால் ஏற்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால்தான் பணமில்லாத சிகிச்சை திட்டம் கொண்டு வரப்பட்டது. இதன் கீழ், வாகன காப்பீடு 7 நாட்களுக்கு, அதிகபட்சம் ரூ. 1.5 லட்சம் வரை மருத்துவச் செலவை ஈடு செய்ய முடியும்” என்று கூறினார். 

சார்ந்த செய்திகள்