Skip to main content

“சிறுவன் கொல்லப்பட்ட விவகாரத்தில் உடனடிநடவடிக்கை எடுக்க வேண்டும்” - இ.பி.எஸ் வலியுறுத்தல்

Published on 12/12/2024 | Edited on 12/12/2024
EPS insists on taking immediate action in the boy  case

சிறுவன் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புள்ள அனைவரையும் உடனடியாக கைது செய்து தக்க சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஸ்டாலினின் திமுக அரசை வலியுறுத்துகிறேன் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கடந்த 9ஆம் தேதி காணாமல் போன கருப்பசாமி என்ற சிறுவன், 10ஆம் தேதி மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டதாக செய்திகள் வந்த நிலையில், இன்று அச்சிறுவனின் பெற்றோர் மற்றும் தாத்தா ஆகியோர் தங்கள் இன்னுயிரை மாய்த்துக்கொள்ள முயன்றதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

சிறுவன் கழுத்தில் இருந்த நகை மாயமாகி உள்ள நிலையில், புகார் அளித்த அன்றே தீவிரமாக காவல்துறை விசாரித்திருந்தால் குழந்தையை காப்பாற்றியிருக்கலாம் என்று குடும்பத்தார் புகார் தெரிவித்துள்ளனர். திமுக அரசின் காவல்துறை, முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் மெத்தனப் போக்கில் செயல்படுவது கடும் கண்டனத்திற்குரியது. இது தான் சட்டம் ஒழுங்கை ஒரு முதல்வர் நேரடி கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் விதமா மு.க.ஸ்டாலின்?

சிறுவனின் பெற்றோர் மற்றும் தாத்தாவிற்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிப்பதுடன், சிறுவன் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புள்ள அனைவரையும் உடனடியாக கைது செய்து தக்க சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஸ்டாலினின் திமுக அரசை வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்