டெல்லியில் கடந்த 11ஆம் தேதி நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா தலைமையில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி என 38 டி.எம்.சி தண்ணீரைத் திறக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று காவிரியில் நீர் திறக்க உத்தரவானது பிறப்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நீர் திறக்கப்பட்டு வரும் நிலையில், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் வரத்து அதிகரித்து வருகிறது.
இன்று காலை மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 12,523 கன அடியாக இருந்த நிலையில், தற்போதைய நிலவரப்படி வினாடிக்கு 13,110 கன அடி நீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காக திறக்கப்பட்டு வந்த நீரின் அளவு 6,000 கன அடியிலிருந்து 8,000 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 54.40 அடியாகவும், நீர் இருப்பு 20.696 டி.எம்.சியாகவும் உள்ளது. கடந்த இரண்டு நாட்களாக நீர் வரத்து அதிகரித்துள்ளதால், ஒரு அடிக்கு மேலாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.