வடமாநிலங்களில் இருந்து சேலம் சந்தைக்கு பூண்டு வரத்து அதிகரித்துள்ளதால், ஒரு மாதத்திற்கு முன்பு கிலோ 130 ரூபாய்க்கு விற்கப்பட்ட பூண்டு தற்போது 70 ரூபாயாகச் சரிந்துள்ளது.
தென்னிந்திய சமையலில் பூண்டு முக்கிய அங்கம் வகிக்கிறது. நாட்டு மருத்துவத்திலும் பூண்டுக்கு தனி இடம் இருக்கிறது. அதிமுக்கியத்துவம் வாய்ந்த பூண்டு, தென்னிந்தியாவைக் காட்டிலும் மத்தியபிரதேசம், ராஜஸ்தான், மஹாராஷ்டிரா ஆகிய வட மாநிலங்களில் அதிகளவில் பயிரிடப்படுகிறது. இம்மாநிலங்களில் பூண்டு, முக்கியப் பணப்பயிர்களுள் ஒன்றாகவும் விளங்குகிறது.
மார்ச் முதல் மே மாதம் வரை வடமாநிலங்களில் பூண்டு அறுவடை செய்யப்படுகிறது. கரோனா ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்ததால் சரக்கு லாரி போக்குவரத்தும் தடை செய்யப்பட்டு இருந்தது. இதனால் சீசன் காலங்களில் பூண்டு அறுவடை செய்யப்பட்டாலும்கூட சரக்கு போக்குவரத்துக்குக் கட்டுப்பாடுகள் இருந்ததால் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களுக்குப் பூண்டுகளை அனுப்புவதில சிக்கல் ஏற்பட்டது. இதனால் ஏற்கனவே கொள்முதல் செய்யப்பட்ட சரக்கு இருப்பில் இருந்ததால் தமிழகத்தில் சேலம் உள்ளிட்ட முக்கிய மளிகை, காய்கறி சந்தைகளில் பூண்டு கிலோ 130 முதல் 170 ரூபாய் வரை உயர்ந்தது.
இதற்கிடையே, மே மாத இறுதியில் ஊரடங்கு விதிகளில் படிப்படியாகத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதையடுத்து, கடந்த ஒரு வாரமாக சேலம் சந்தைக்கு வடமாநிலங்களில் இருந்து பூண்டு வரத்து அதிகரிக்கத் தொடங்கி உள்ளன. தற்போது சேலம் சந்தைக்கு நாளொன்றுக்கு 70 முதல் 80 டன் வரை பூண்டு வரத்தாவதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.
வரத்து அதிகரித்துள்ளதால் மொத்த வணிகத்தில் பூண்டு கிலோ 70 முதல் 50 ரூபாய் வரை தடாலடியாகச் சரிந்துள்ளது. அதாவது, கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வரை கிலோ 130 ரூபாய்க்கு விற்ற முதல் தர பூண்டு தற்போது 70க்கும், முன்பு 100 ரூபாய்க்கு விற்கப்பட்ட பூண்டு இப்போது கிலோ 50 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.
அதேபோல் கிலோ 200 ரூபாய்க்கு விற்பனை ஆகி வந்த நீலகிரி பூண்டு இப்போது 60 ரூபாய் வரை குறைந்து கிலோ 140க்கு விற்பனை ஆகிறது. பூண்டு விலை பெருமளவு குறைந்துள்ளதால், விற்பனையும் கணிசமாக அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் கூறினர்.