கரூரில் பல்வேறு இடங்களில் ஆறாவது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த 26 ஆம் தேதி மாநகராட்சிக்கு உட்பட்ட ராமகிருஷ்ணபுரம் பகுதியில் அமைந்துள்ள மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் வீட்டில் சோதனை நடத்தச் சென்ற அதிகாரிகளை திமுகவினர் பலர் தடுத்து நிறுத்தியதால் சோதனை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில் ஐந்தாவது நாளான நேற்று அதே பகுதியில் அமைந்துள்ள அசோக்குமார் அலுவலகமான அப்பெக்ஸ் இன்பக்ஸ்-ல் இரண்டு வாகனங்களில் வந்த ஆறு அதிகாரிகள் துப்பாக்கி ஏந்திய மத்திய துணை ராணுவப் படை வீரர்கள் பாதுகாப்புடன் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், அசோக் குமார் வீட்டில் சென்னை வருமான வரித்துறை உதவி இயக்குநர் நாகராஜ் அனுப்பிய சம்மன் ஒட்டப்பட்டுள்ளது. அதில், நேற்று காலை 10:30 மணிக்குள் அவரோ அல்லது அவர் சார்பாக பிரதிநிதி ஒருவர் சின்னாண்டாங்கோவில் பகுதியில் அமைந்துள்ள வருமான வரித்துறை பிரிவு அலுவலகத்தில் ஆஜராகி, கணக்கு வழக்குகளை தாக்கல் செய்ய வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அசோக்குமாரின் ஆடிட்டர் ஒருவர் ஆஜராகி கால அவகாசம் கேட்டு பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.