அருப்புக்கோட்டையில் ஒப்பந்ததாரர் செய்யாதுரை, கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் நண்பர் சந்திரசேகர் உள்ளிட்டோரின் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனை நள்ளிரவு வரை நீடித்தது.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் நெடுஞ்சாலைத் துறையின் முதன்மை ஒப்பந்த நிறுவனமான எஸ்பிகே அலுவலகம், அதன் உரிமையாளர் செய்யாதுரையின் வீடு, அவரது மகன்களின் வீடு என ஐந்து இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சுமார் 10 மணி நேரத்திற்கும் மேல் நீடித்த சோதனையில் முக்கிய ஆவணங்களும், பணமும் கைப்பற்றப்பட்டதாகவும், நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த பணிகளில் வரி ஏய்ப்பு நடந்ததாக எழுந்த புகார்களின் பேரில் சோதனையிடப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே கீழ்முடிமன்னார்கோட்டையில் உள்ள செய்யாத்துறை வீட்டிலும் 8 மணி நேரமாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.
கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பிவேலுமணியின் நண்பரும், அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மா வெளியீட்டாளருமான சந்திரசேகருக்கு சொந்தமான ஆறு இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையிட்டனர். இந்த சோதனையானது சுமார் 13 மணி நேரம் நீடித்தது.
சோதனை நடந்து கொண்டிருந்த போது, சந்திரசேகரின் ஆதரவாளர்கள் வீட்டின் முன் திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.