கடந்த பத்து மணி நேரத்திற்கு மேலாக 'ஆர்த்தி ஸ்கேன் சென்டர்' எனும் தனியார் ஸ்கேன் சென்டருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மொத்தமாக 25 இடங்களில் இன்று காலை முதல் சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னையில் 13 இடங்களிலும் திருநெல்வேலி, கோவில்பட்டி, தஞ்சை, தென்காசி உள்ளிட்ட பகுதிகளிலும் சோதனை நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2000 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்திற்கு நூற்றுக்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளது. அதேபோல் 9 மாநிலங்களிலும் இந்த நிறுவனத்தின் கிளைகள் உள்ளது. கரோனா காலத்தில் அளவுக்கு அதிகமாக ஸ்கேன் எடுக்கப்பட்டதில் வரி ஏய்ப்பு நடந்துள்ளது என கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. அதேபோல் கடந்த 5 ஆண்டுகளில் நாட்டின் பல்வேறு இடங்களில் பல கிளைகளை இந்நிறுவனம் உருவாக்கி இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தும் விதமாக இருப்பதால் இந்த சோதனை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.