தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கையை தேசிய மனித உரிமை ஆணையம், சீல் வைத்த கவரில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 2018 போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியாகினர். இது குறித்து தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. இதுகுறித்து தமிழக அரசிற்கும் தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. மேலும் தேசிய மனித உரிமை ஆணையத்தில் புலனாய்வுப் பிரிவு இச்சம்பவம் குறித்து நேரடியாக தூத்துக்குடி சென்று விசாரணை மேற்கொண்டது. அதன் அறிக்கை தேசிய மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், தமிழக முதன்மை செயலாளர் தரப்பில் செப்டம்பர் மாதம் 2018 ஆம் ஆண்டு மனித உரிமை ஆணையத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் தேசிய மனித உரிமை ஆணையம் அக்டோபர் 2018 ஆம் ஆண்டு இந்த வழக்கை முடித்து வைத்தது.
இதை எதிர்த்து மதுரையைச் சேர்ந்த ஹென்றி திபேன் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், தேசிய மனித உரிமை ஆணைய புலனாய்வு பிரிவினர் நடத்திய விசாரணை குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடாததால், இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி சிவஞானம் அமர்வு, "எந்த ஆயுதமும் இன்றி போராடிய பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது. இது போன்ற சம்பவங்கள் இனி நடைபெறக்கூடாது. ஒரு நாகரிகமான சமுதாயத்தில் இது ஏற்புடையதா?" என்று கேள்வி எழுப்பியது. மேலும், தேசிய மனித உரிமை ஆணையத்தின் புலனாய்வு பிரிவு அறிக்கை மற்றும் தமிழக முதன்மைச் செயலர் அறிக்கை இரண்டையும் சீல் வைக்கப்பட்ட கவரில் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், தேசிய மனித உரிமை ஆணையமும், தமிழக அரசும் பதிலளிக்க உத்தரவிட்டு, இந்த வழக்கைச் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டனர்.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி சிவஞானம் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஏற்கனவே பிறப்பித்த உத்தரவின்படி, தேசிய மனித உரிமை ஆணையத்தின் புலனாய்வு பிரிவு அறிக்கை சீல் வைக்கப்பட்ட கவரில் தாக்கல் செய்யப்பட்டது. தமிழக பொதுத்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், சம்பவம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையம், சம்பவம் நடந்த இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தியதுடன் பல ஆதாரங்களைச் சேகரித்துள்ளதாகவும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகள் அடங்கிய 'ஹார்ட் டிஸ்க்' பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்ட துணை தாசில்தார்களின் மொபைல் எண் தொடர்பு விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும், 718 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு, 1,126 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை முதல் காவல் துறை அதிகாரிகள் விசாரிக்கப்பட்டு வருவதாகவும், பலியான 13 பேரின் குடும்பங்களுக்கு தலா 20 லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா 5 லட்சம் ரூபாயும், லேசான காயமடைந்த 64 பேருக்கு தலா 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும் வழங்கவும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் 21 பேருக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையம் கடந்த மே 14ம் தேதி அளித்த இடைக்கால அறிக்கையில் அளித்த பரிந்துரை அடிப்படையில், போராட்டக்காரர்களுக்கு எதிரான 38 வழக்குகள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாகவும், 84 பேருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கில் தேசிய மனித உரிமை ஆணையம் சார்பில் பதில் மனுத் தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டதை ஏற்ற நீதிபதிகள், மூன்று வார கால அவகாசம் வழங்கி, விசாரணையைச் செப்டம்பர் 13ம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.