கடலூர் மாநகராட்சியில் பாதாள சாக்கடை குழியில் மனிதனை இறக்கி சுத்தம் செய்த வீடியோ வைரல் ஆகி அனைத்து தரப்பினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினர் கண்டனத்தை பதிவு செய்து வருகிறார்கள்.
இது குறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் மாதவன் கூறுகையில், ''தமிழகத்தில் பாதாள சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபடும் ஊழியர்கள் விஷவாயு தாக்கியதால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. கடலூரில் பல்வேறு இடங்களில் பாதாள சாக்கடை அடைப்பை அகற்ற மனிதர்கள் பாதாள சாக்கடைக்குள் இறங்கி சுத்தம் செய்யும் காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதாள சாக்கடை சுத்தம் செய்யும் பணியில் மனிதர்களை பயன்படுத்தக் கூடாது இயந்திரங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறபித்துள்ளது.
இந்த உத்தரவை பின்பற்றாத கடலூர் மாநகராட்சி அதிகாரிகளின் போக்கை சிபிஎம் வன்மையாக கண்டிக்கிறது. மேலும் மனித கழிவுகளை பாதாள சாக்கடைக்குள் சுத்தம் செய்த இவர்களுக்கு உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும்.
நீதிமன்ற உத்தரவை மீறி மாநகராட்சி அதிகாரிகள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநகராட்சி துப்புரவு ஊழியர்களுக்கு போதிய நவீன உபகரணங்கள் மற்றும் பணி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும், மாநகராட்சியின் மற்ற பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு நடத்தி பாதாள சாக்கடை சுத்தம் செய்யும் பணியில் மனிதர்களை பயன்படுத்த வில்லை என்பதை உறுதி செய்ய வேண்டுமென சிபிஎம் கடலூர் மாவட்ட குழு சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்'' என்றார்.
அதேபோல் குடியிருப்போர் நல சங்கத்தின் தலைவர் மருதவாணன் கூறுகையில், ''கடலூரில் பாதள சாக்கடைகள் அனைத்து தெருக்களிலும் வழிந்தோடுகிறது. சரியான பராமரிப்பு இல்லை. நீதிமன்றம், மத்திய, மாநில அரசுகள் உள்ளாட்சி அமைப்புகள் பாதள சாக்கடையில் மனிதர்களை இறக்கி சுத்தம் செய்யக்கூடாது என்று தடைசெய்யப்பட்ட நிலையிலும் இதுபோன்று நடைபெறுவது கண்டனத்திற்குறியது'' என்றார்.
மாநகராட்சி ஆணையர் அனு கூறுகையில், 'அவர் பணியில் சேர்ந்து 2 நாட்கள் தான் ஆகிறது. பாதாள சாக்கடையில் மனிதரை இறக்கிய ஒப்பந்த நிறுவனத்தின் பணி ஆணையை ரத்து செய்து விட்டதாகக் கூறினார். இனிமேல் இது போன்று எதிர் காலத்தில் சம்பவங்கள் நடைபெறாது' என்றும் கூறியுள்ளார்.