கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த 11 வயது சிறுமி 7 ஆம் வகுப்பு படித்து வந்தார். தற்போது ஊரடங்கு காரணமாக பள்ளி திறக்காததால், அச்சிறுமி வீட்டிலேயே இருந்துள்ளார். அவரது தந்தை ஒட்டுனராக உள்ளதால், அவரது தாய் குடும்பத்தைக் கவனித்து வந்துள்ளார்.
இந்நிலையில் அந்தச் சிறுமி (19.08.2020) மாலை இயற்கை உபாதை கழிப்பதற்காகச் சென்றுள்ளார். இதனைப் பார்த்த அதே பகுதியைச் சேர்ந்த ராமநாதன் (வயது 44), என்பவர் அந்தச் சிறுமியைப் பின்தொடர்ந்து சென்று, வலுக்கட்டாயமாக அருகில் இருந்த பொதுக் கழிப்பறைக்கு தூக்கிச் சென்று, பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார். மேலும் 'இதுபற்றி வெளியில் கூறினால் கொன்று விடுவேன்' என அச்சிறுமியை மீண்டும் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார்.
இந்நிலையில் அச்சிறுமி சத்தம் போட்டுக் கதறியுள்ளார். அதையடுத்து அப்பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் ஓடிச்சென்று பார்த்து ஆவேசமடைந்து ராமநாதனை அடித்துத் துரத்திவிட்டு சிறுமியை மீட்டனர். பின்னர் கருவேப்பிலங்குறிச்சி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்ததையடுத்து அங்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ராமநாதனை மீட்டு, விருத்தாசலம் மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
பின்னர் அந்தச் சிறுமியின் தாய் விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் ராமநாதனை போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்து, வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.