தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகிலுள்ள தெற்கு பேய்க்குளத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார் (38). இவரது மனைவி வசந்தா. இவர்களுக்கு ஒரு மகன் இரண்டு மகள்கள் உள்ளனர். மேலும் அந்த பகுதியின் ஸ்ரீவெங்கடேசபுரம் கிராமத்தின் முன்னாள் ஊராட்சி உறுப்பினர் ஜெயக்குமார்.
தற்போது தனது வீட்டுப் பகுதியில் பெட்டிக்கடை நடத்திவருவதுடன் சொந்தமாக ஆட்டோ வைத்து வாடகைக்கு ஒட்டிவந்திருக்கிறார். தன்னுடைய பகுதியில் எந்த ஒரு இடத்திலும் தவறு நடந்தாலும் தயங்காமல் தட்டிக் கேட்கும் குணம் கொண்டவராம் ஜெயக்குமார்.
நேற்று மாலை ஜெயக்குமார் அந்தப் பெட்டிக்கடையினருகே நின்று கொண்டிருந்தபோது மூன்று பைக்குகளில் வந்த அடையாளம் தெரியாத 8 பேர் கொண்ட கும்பல் அவரை நோட்டமிட்டு திடீரென்று சுற்றி வளைத்துக் கொண்டு சரமாரியாக வெட்டியதில் ரத்த வெள்ளத்தில் அலறித் துடித்த ஜெயக்குமாரின் உயிர் மூச்சு சம்பவ இடத்திலேயே அடங்கியுள்ளது.
தகவலறிந்து ஸ்பாட்டுக்கு வந்த சாத்தான்குளம் (பொறுப்பு) டி.எஸ்.பி. பிரதாபன், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மற்றும் போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பிவைத்தனர். தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.யான அருண்பால கோபாலன் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு, விசாரணை நடத்தியிருக்கிறார்.
மாஜி கவுன்சிலரான ஜெயக்குமார் பிரச்சனைகள், மற்றும் ஏதேனும் விவகாரங்கள் கிளம்பும்போது, தயங்காமல் தொடர்புடையவர்கள் மீது, உயரதிகாரிகளிடம் பெட்டிஷன் அனுப்பும் குணம் கொண்டவர் என்பதால் அவரைப் பெட்டிஷன் ஜெயக்குமார் என்று அழைப்பதுண்டாம்.
மேலும் மூன்று மாத்திற்கு முன்பு ஆடு மேய்க்கும் தகராறில் இரண்டு பிரிவினருக்குமிடையே முன் விரோதம் இருந்து வந்திருக்கிறது. என்று எஸ்.பி.யின் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.
கொலைக்கு அடிப்படை பெட்டிஷன் பகையா, ஆடு மேய்ப்பதில் முன் விரோதமா என்பன போன்ற கோணங்களில் புலன் விசாரணை போவதாக காவல் துறை வட்டாரத்தினர் தெரிவிக்கின்றனர். மாஜி உறுப்பினர் கொலை சம்பவம் அந்தப் பகுதியில் பதற்றத்தை கிளப்பியிருக்கிறது.