தூத்துக்குடி மாவட்டத்தின் தட்டார்மடம் பகுதியின் சொக்கன் குடியிருப்பைச் சேர்ந்த காலமான தனிஸ்லாசின் மகன் செல்வம் குடும்பத்தினருக்கும் அந்தப் பகுதியின் உசரத்துக்குடியிருப்பைச் சேர்ந்த அ.தி.மு.க.வின் மாவட்ட வர்த்தக அணிச் செயலாளரான திருமணவேலுவுக்கும் நிலம் தொடர்பான விவகாரம் வளர்ந்திருக்கிறது. இது குறித்து பலமுறை செல்வம், தட்டார்மடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணனிடம் புகார் செய்தும் நடவடிக்கை மேற்கொள்ளாத இன்ஸ்பெக்டர், திருமணவேலுவிற்கு ஆதரவாகச் செயல்பட்டிருக்கிறார். அவரிடம் புகாரை வாங்கி செல்வம் மற்றும் அவரது சகோதரர்கள் மீதே வழக்குப் போட்டுச் சிறையிலடைத்திருக்கிறார்.
இதனால் தனக்கு நியாயம் வேண்டி செல்வம் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் முறையிட்டிருக்கிறார். செப் 16 அன்று அதற்குப் பதில் மனு தாக்கல் செய்யும்படி இன்ஸ்பெக்டர் ஹரி கிருஷ்ணனுக்கு கோர்ட் நோட்டிபிகேஷன் போயிருக்கிறது. இதனிடையே கடந்த 17ம் தேதி செல்வம் சொக்கன் குடியிருப்பிற்கு தனது பைக்கில் திரும்பிக்கொண்டிருந்த போது காரால் மோதிக் கீழே விழச்செய்து அவரைக் காரில் கடத்திச் சென்ற கும்பல் உருட்டுக் கட்டைகளால் தாக்கிக் கொலைசெய்தது.
திருமணவேல் மற்றும் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் இருவரின் தூண்டுதலால் தனது மகன் கொலை செய்யப்பட்டார் என்று செல்வம் தாய் எலிசபெத் கொடுத்த புகாரின் மீது நடவடிக்கை மேற்கொண்ட உயரதிகாரிகள், திருமணவேல், இன்ஸ்பெக்டர் ஹரி கிருஷ்ணன் இருவர் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்தனர்.
இதனிடையே 17ம் தேதியன்று போஸ்ட்மார்ட்டம் செய்யப்பட்ட செல்வத்தின் உடலை அவரது உறவினர்கள் வாங்கவில்லை. திருமணவேல், இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் இருவரையும் கைது செய்ய வேண்டும். கணவனைப் பறி கொடுத்த அவர் மனைவி செல்வஜீவிதாவிற்கு உரிய நிவாரணம் தரப்பட வேண்டும் என்ற கோரிக்கையோடு இரண்டு நாளாகப் போராடி வருகின்றனர்.
இந்த நிலையில் அடுத்த கட்டமாக சொக்கன் குடியிருப்பு கிராமத்தில் உள்ள ஆலயமணி அடிக்கப்பட்டு ஊரே திரண்டது. செல்வனின் மனைவி செல்வஜீவிதா மற்றும் கிராமத்தினர் அங்குள்ள தனிஸ்லாஸ் தேவாலயம் முன்பாக தர்ணா போராட்டம் நடத்தினர். பனங்காட்டுப் படையின் மா.செ.வான ஓடை செல்வமும் உடன் இருந்தார்.
தகவலறிந்து அங்கு வந்த மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் சாத்தான்குளம் தாசில்தார் ராஜலட்சுமி, உள்ளிட்ட அதிகாரிகள் செல்வத்தின் மனைவியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். திருமணவேல் மற்றும் இன்ஸ்பெக்டர் இருவரும் கைது செய்யப்படவேண்டும்.பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு நிவாரணமளிக்க வேண்டும் அதுவரை உடலைப் பெறமாட்டோம் என்றனர். அதிகாரிகளின் பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.
இந்நிலையில் வழக்கில் தொடர்புடைய முத்துராமலிங்கம், சின்னத்துரை ராமன் மூன்று பேரைப் போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களில் முத்துராமலிங்கம் திருமணவேலின் மைத்துனர். சம்பவத்தில் ஆள்காட்டியாக செயல்பட்டவராம். அ.தி.மு.க. புள்ளியான இவர் புத்தன் தருவை கூட்டுறவு வாங்கித் தலைவர் பதவியிலிருப்பவர்.
உடல் பெறப்படாததால் உச்சப் பதற்றத்திலிருக்கிறது தட்டார்மடம் ஏரியா.