திருவண்ணாமலை மாவட்டம், தச்சம்பட்டு காவல்நிலையத்துக்கு உட்பட்ட ஒரு கிராமத்தை சேர்ந்த 4 வயது குழந்தையை அதே ஊரை சேர்ந்த 16 வயது சிறுவன் ஏரிக்கரைக்கு அழைத்து சென்று, அந்த 4 வயது குழந்தையை பாலியல் வல்லுறவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த குழந்தை அழுதுக்கொண்டே வீட்டுக்கு வந்தபோது, பெற்றோர் கேட்க, நடந்ததை அந்த சிறுமி சொல்ல அதிர்ச்சியான அவர்கள், அந்த 16 வயது சிறுவனை அழைத்துக்கொண்டு தச்சம்பட்டு காவல்நிலையத்துக்கு வந்துள்ளனர். அங்கிருந்த இன்ஸ்பெக்டர் மணிமாறன், சின்னப்பையன் தெரியாம செய்துயிருப்பான், சமாதானமா போங்க, நான் பஞ்சாயத்து செய்யறன் என சொன்னதாக கூறப்படுகிறது.
இன்ஸ்பெக்டரின் இந்த பதிலால் அதிருப்தியாகியுள்ளனர் குழந்தையின் உறவினர்கள். மதியம் 2 மணிக்கு காவல்நிலையத்துக்கு வந்தவர்களை மாலை 5 மணிவரை உட்காரவைத்துள்ளார் இன்ஸ்பெக்டர். இதில் அதிருப்தியானவர்கள் கேள்வி எழுப்ப, இது மகளிர் காவல்நிலைய அதிகாரத்துக்கு உட்பட்டது எனச்சொல்லி திருவண்ணாமலை மகளிர் காவல்நிலையத்துக்கு அனுப்பியுள்ளனர்.
அங்கு வந்தபிறகு இன்ஸ்பெக்டர் இல்லை எனச்சொல்லி இழுத்தடித்து உட்காரவைத்துள்ளனர். இரவு 8 மணியாகியும் யாரும் விசாரிக்காததால் அதிருப்தியான குழந்தையின் பெற்றோர் காவல்நிலையத்தின் முன் நின்று கோஷங்கள் எழுப்பினர். அதன்பின் வந்து அதிகாரிகள் விசாரிக்க தொடங்கியுள்ளனர்.
விசாரணை சரியாக செய்யவில்லை எனச்சொல்லி திருவண்ணாமலை மாவட்ட சி.பி.எம் கட்சியினர், குழந்தை பாலியல் விவகாரத்தில் கட்டப்பஞ்சாயத்து செய்த இன்ஸ்பெக்டர் மணிமாறனை டிஸ்மிஸ் செய், கைது செய் எனக்கேட்டு நகர் முழுவதும் நோட்டீஸ் அச்சடித்து ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.