மது போதையில் வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்த சம்பவம் திருப்பூரில் நிகழ்ந்துள்ளது.
திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகே 5 இளைஞர்கள் சாலையில் செல்லும் மக்களிடம் வழிப்பறியில் தொடர்ந்து ஈடுபட்டுவந்துள்ளனர். இந்நிலையில், நேற்று (13.07.2021) அவ்வழியே வந்த முதியவர் ஒருவரிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். மேலும், பணம் தராததால் கத்தியால் அவரை குத்திய நிலையில் அவர் காயமடைந்தார். இதற்கு மேலும் பொறுமை காக்க முடியாது என்ற நிலையில் அப்பகுதியில் இருந்த பொதுமக்களே அந்த இளைஞர்களைத் தாக்க முற்பட்டனர்.
வழிப்பறியில் ஈடுபட்ட 5 இளைஞர்களில் இரண்டு பேர் தப்பி ஓடிய நிலையில், மதுபோதையில் இருந்த மூன்று இளைஞர்களை மட்டும் பிடித்துக் கட்டிப்போட்டு தர்மஅடி கொடுத்தனர். அதேபோல் காவல்துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டு மூவரும் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். 3 பேர் மீதும் வழக்குப் பதிவுசெய்த காவல்துறையினர், தப்பியோடிய 2 நபர்கள் குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.