திருச்சியில் 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதோடு மட்டுமல்லாமல் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட அந்தச் சிறுமிக்கு சிகிச்சை அளிப்பதிலும் அலைக்கழிப்பு நடந்துள்ளதுதான் பெரும் வேதனை.
திருச்சியில் கூலித் தொழிலாளியின் 13 வயது மகள் பள்ளிக்குச் சென்று சாதிச் சான்றிதழைக் கொடுத்துவிட்டு திரும்பி வந்துகொண்டிருந்தார். வயல் வழியாக நடந்துவந்த பொழுது, சிறுமியை மறைமுகமாகத் தொடர்ந்து வந்த பாலமுருகன் என்ற 28 வயது நபர், சிறுமியைத் தலையில் அடித்துத் தாக்கியுள்ளார். இதில் மயக்கம் அடைந்த சிறுமியை அருகில் இருந்த காட்டுக்குள் தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியுள்ளார்.
தலையில் தாக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட சிறுமி, கிழிந்த உடைகளுடன் வீட்டிற்குச் சென்று பெற்றோர்களிடம் நடந்ததைக் கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள், உடனடியாகச் சிறுமியை திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் மருத்துவர்கள் காவல்துறையின் முதல் தகவல் அறிக்கை நகல் இல்லாமல் சிகிச்சை அளிக்க முடியாது எனக் கூறியதாகக் கூறப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஆதரவாக அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் மருத்துவமனைக்கு வந்து மருத்துவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், சிறுமிக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்துள்ளனர் மருத்துவமனை ஊழியர்கள்.
இந்தச் சம்பவம் குறித்து பாலமுருகன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அனைத்து மகளிர் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சியில் 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவமும், சிறுமிக்கு நேர்ந்த அலைக்கழிப்பும் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.