வயிற்றுவலியால் காதல் மனைவி தற்கொலை செய்துகொள்ள, மனைவியின் பிரிவைத் தாங்க முடியாமல் இளைஞன் தண்டவாளத்தில் விழுந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டியை அடுத்து உள்ளது தம்மநாயகன்பட்டி. அவ்வூரைச் சேர்ந்தவர் டிப்ளோமா பட்டதாரி ரவிக்குமார். சேலம் சீலநாயக்கன்பட்டியில் உள்ள இருசக்கர விற்பனை கடையில் மெக்கானிக்காக பணியாற்றிவந்த ரவிக்குமார் மல்லூரைச் சேர்ந்த அவரது நண்பனின் தங்கையான சரண்யா என்பவரை காதலித்து இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டுள்ளார். இந்நிலையில் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த சரண்யா அவ்வப்போது கணவன் ரவிகுமாருடன் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை எடுத்து வந்துள்ளார். அதோடு மட்டுமல்லாது சரண்யாவின் தந்தை இறந்து ஓராண்டு ஆன நிலையில் தந்தையின் நினைவிலேயே சரண்யா இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மனஉளைச்சலில் காணப்பட்ட சரண்யா கடந்த வியாழக்கிழமை மாலை யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
மனைவி தற்கொலை செய்து கொண்டதைக் கேள்விப்பட்டு வீட்டுக்குப் பதறியடித்து ஓடிவந்த ரவிக்குமார் காதல் மனைவியின் உடலைப்பார்த்து கதறி அழுதுள்ளார். சரண்யாவின் உடல் போலீசாரால் கைப்பற்றப்பட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டது. உடலுடன் ஆம்புலன்ஸில் சென்ற ரவிக்குமார் 'நானும் நீ போன இடத்திற்கே வந்துவிடுவேன்' எனக் கதறி அழுதுள்ளார். உறவினர்கள் ஆறுதல் சொல்லி தேற்றியபோதும் அவர் அழுகையை நிறுத்தவில்லை. மனைவியின் உடலை சேலம் குமாரமங்கலம் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை கூடத்தில் வைத்தவுடன் 'நான் வீட்டிற்கு போன உடன் வருகிறேன்' என உறவினர்களிடம் சொல்லிவிட்டு கிளம்பியுள்ளார்.
வீட்டிற்கு செல்வதாக வெளியே வந்த ரவிக்குமார் இரவு 8 மணியளவில் கொண்டலாம்பட்டியில் உள்ள சேலம்-கரூர் ரயில் பாதையில் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்துகொண்டார். மனைவி இறந்த 2 இரண்டே மணிநேரத்தில் தற்கொலை செய்துகொண்ட ரவிக்குமாரின் உடல் தலைவேறு உடல் வேறாக மனைவி உடல் வைக்கப்பட்டிருந்த அதே பிரேதப் பரிசோதனைக் கூடத்திற்கு அனுப்பப்பட்டது. காதல் மனையின் உயிரிழப்பைத் தாங்க முடியாத காதல் கணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.