சேலம் அருகே, சொத்து தகராறில் தந்தை மற்றும் மணப்பெண்ணை அரிவாளால் வெட்டிய சித்தப்பாவை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
சேலம் அருகே உள்ள சிவதாபுரம் அங்காளம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தன் (65). ஆட்டோ ஓட்டுநர். இவருடைய மகள் நந்தினி (23). கோவிந்தனுக்கு அதே பகுதியில் பூர்வீக சொத்து இருக்கிறது. இது தொடர்பாக கோவிந்தனுக்கும் அவருடைய தம்பி சீனிவாசனுக்கும் முன்விரோதம் இருந்து வருகிறது.
கடந்த சில நாள்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து, அவர்கள் இருவரும் சொத்தை சரிபாதியாக பிரித்துக் கொண்டனர்.
இந்நிலையில், கோவிந்தன் தனது மகள் நந்தினிக்கு அதே பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகளைச் செய்து வந்தார். திருமணத்திற்கு 3 நாள்களே உள்ள நிலையில், அவருடைய வீட்டில் புதன்கிழமை (செப். 5, 2019) முகூர்த்தக்கால் நடப்பட்டது. திருமணத்திற்குப் பிறகு தன்னுடைய சொத்துகளை மகளின் பெயரில் எழுதிவைக்க கோவிந்தன் முடிவு செய்திருந்தார். இதையறிந்த சீனிவாசன், சொத்தை நந்தினி பெயருக்கு மாற்றக்கூடாது என்றுகூறி கோவிந்தனிடம் தகராறு செய்தார். இதனால் அவர்கள் இருவருக்கும் மீண்டும் மோதல் ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த சீனிவாசன், அருகில் கிடந்த அரிவாளை எடுத்து கோவிந்தனை வெட்டினார். அவருடைய இரண்டு கைகளிலும் வெட்டு விழுந்தது. தந்தையைக் காப்பாற்ற நந்தினி முயன்றபோது, அவருக்கும் தலை, கை உள்ளிட்ட இடங்களில் அரிவாள் வெட்டு விழுந்தது. அக்கம்பக்கத்தினர் கூடிவிட்டதால் சீனிவாசன் அரிவாளைப் போட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடவிட்டார்.
வெட்டுக்காயம் அடைந்த கோவிந்தனையும், நந்தினியையும் உறவினர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக கொண்டலாம்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.