சேலத்தில் நகைப்பட்டறை உரிமையாளர் ஒருவர் தேடப்பட்டு வந்த நிலையில் காரில் காதலியுடன் சடலமாக மீட்பாகப்பட்ட சம்பவம் நடந்தேறியுள்ளது.

சேலம் செவ்வாய்பேட்டை சாய்பாபா காலனி பகுதியை சேர்ந்த சுரேஷ் என்ற இளைஞர் அதேபகுதியில் அவரது தந்தையுடன் சேர்ந்து வெள்ளி நகை பட்டறை வைத்து நடத்திவந்தார். இந்நிலையில் திடீரென நேற்று சுரேஷ் காணாமல் போக அவரது மொபைல் போனும் சுவிட்ச் ஆப் ஆனது இதனால் பதற்றமடைந்த அவரது குடும்பத்தாரும், நண்பர்களும் பல இடங்களில் தேடினர். ஆனால் சுரேஷ் பற்றிய தகவல் கிடைக்காததால் சேலம் செவ்வாய்பேட்டை காவல்நிலையத்தில் புகாரளித்தனர். ஆனாலும் நண்பர்கள் சுரேசை தேடுவதை கைவிடவில்லை.

இந்நிலையில் இரவு சுமார் 12 மணியளவில் சுரேசுக்கு சொந்தமான கார் செட்டில் கதவு லேசாக திறக்கப்பட்டிருந்ததை பார்த்த அவரது நண்பர்கள் உள்ளே சென்று பார்த்தபோது காரில் சுரேசும் ஒரு இளம்பெண்ணும் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ந்த அவர்கள் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த போலீசார் இருவரின் உடலையும் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் அந்த இளம்பெண் சேலத்தில் ஒரு தனியார் கல்லூரியில் இறுதி ஆண்டு பொறியியல் படித்துவரும் ஜோதிகா என்பதும், இருவரும் இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்ததும், காதலை பெற்றோர்கள் எதிர்ப்பார்கள் என்று நகைப்பட்டறையில் உள்ள சயனைடை குடித்து காரில் தற்கொலை செய்துகொண்டதும் தெரியவந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.