கள்ளக்குறிச்சி அடுத்த சின்னசேலத்தில் தனியார் பள்ளியில் படித்து வந்த பன்னிரெண்டாம் வகுப்பு மாணவி உயிரிழப்பில் மர்மம் நீடிப்பதாக மாணவியின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு பாதுகாப்புக்கு வந்திருந்த காவல்துறை வாகனம் மீது போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியதால் அங்கு அசாதாரண சூழல் நிலவி வருகிற நிலையில் போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டுள்ளனர்.
தற்போது நடைபெற்ற பிரேப் பரிசோதனை அறிக்கையில் தெளிவு இல்லை எனக்கூறி கடந்த ஐந்து நாட்களாக மாணவியின் உடலைப் பெறாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று நடைபெற்ற கல்வீச்சு அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. முதற்கட்டமாக தடியடி நடத்தி போலீசார் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த நினைத்த நிலையில் போராட்டம் கட்டுக்கடங்காததால் காவல்துறையினர் வானத்தை நோக்கி துப்பாக்கிசூடு நடத்தி போராட்டக்காரர்களை எச்சரித்தனர். மேலும் போராட்டக்காரர்கள் அங்கு இருந்த காவல்துறை வாகனத்திற்கு தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் மேலும் பலர் குவிந்து வருவதால் அங்கு பதற்றமான சூழ்நிலை தொடர்ந்து வருகிறது. இந்த கலவரத்தில் டி.ஐ.ஜி பாண்டியன் உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் காயமடைந்துள்ளனர்.
'பள்ளி வளாகத்தை தாக்குவது, காவல் வாகனத்தை தாக்குவது, காவல்துறையினரை தாக்குவது போன்ற சம்பவங்களை தொடர்ந்து நடத்தினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். வீடியோ பதிவு ஆதாரங்களுடன் பிற்காலத்திலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்போம்' என தமிழக டிஜிபி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில் இந்த நிகழ்வு வருத்தத்தை தருவதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், 'கள்ளக்குறிச்சியில் நிலவிவரும் சூழல் வருத்தமளிக்கிறது. மாணவியின் மரணம் குறித்து நடைபெற்று வரும் காவல்துறை விசாரணையின் முடிவில், குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள். உள்துறைச் செயலாளரையும், காவல்துறை தலைமை இயக்குநரையும் கள்ளக்குறிச்சிக்குச் செல்ல உத்தரவிட்டுள்ளேன். அரசின் நடவடிக்கைகளின் மேல் நம்பிக்கை வைத்துப் பொதுமக்கள் அமைதி காக்க வேண்டுகிறேன்' என கேட்டுக்கொண்டுள்ளார்.
உள்துறைச் செயலாளரையும், காவல்துறை தலைமை இயக்குநரையும் கள்ளக்குறிச்சிக்குச் செல்ல உத்தரவிட்டுள்ளேன். அரசின் நடவடிக்கைகளின் மேல் நம்பிக்கை வைத்துப் பொதுமக்கள் அமைதி காக்க வேண்டுகிறேன். (2/2)
— M.K.Stalin (@mkstalin) July 17, 2022