பிரபல சினிமா பாடகரான கானா பாலா, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னை திருவிக நகர் 6ஆவது மண்டலம் 75ஆவது வார்டில் சுயேட்சையாக போட்டியிடுகிறார். அதற்கான தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக இருந்த அவர், நக்கீரனுடனான பேட்டியில் தனக்கான வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாகத் தெரிவித்தார்.
தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக அவர் அளித்த நக்கீரன் பேட்டியில், "இது நான் சந்திக்கும் மூன்றாவது தேர்தல். இந்த முறை எனக்கு தாய்மார்கள் ஆதரவு அதிகம் உள்ளது. எல்லா வார்டுகளில் உள்ள பிரச்சனைகள் போல இங்கும் அடிப்படை பிரச்சனைகள் உள்ளன. குடிநீர், சுகாதாரப் பிரச்சனை, மின்சார வசதி, கொசுத்தொல்லை என சில பிரச்சனைகள் உள்ளன. இந்தப் பிரச்சனைகளை சரிசெய்ய மக்கள் பிரதிநிதிகள் வந்து உதவ வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். ஒரு சில ஏரியாவில் மக்களுக்கு இன்னும் பட்டா வழங்கப்படவில்லை. இந்த வார்டில் மொத்தம் 40ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். எங்கள் மக்களுக்கு ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஏற்படுத்தி தரவேண்டும்.
16 வருடங்களுக்கு முன்பு இந்தப் பகுதியில் தேவை அதிகம் இருந்தது. அப்போது நான் போட்டியிட்டு இரண்டாவது இடம் வந்தேன். 2011இல் மீண்டும் போட்டியிட்டபோது அப்போதும் இரண்டாம் இடம் வந்தேன். சினிமா ஸ்டாராகிவிட்டால் பழையதை மறந்துவிட முடியுமா? சினிமாவில் சென்று சம்பாதித்த பிறகும் நான் இந்த ஏரியாவில்தான் வசிக்கிறேன். மழை, வெள்ளம், புயல், கரோனா என எது வந்தபோதிலும் இந்த ஊரை விட்டு நான் செல்லவில்லை. கரோனா வந்து இறந்தாலும் குடும்பத்தோடு இங்கேயே இறந்துவிடலாம் என்று நினைத்து இங்கேயே இருந்துவிட்டேன். யாரையும் எதிர்த்து போட்டியிட வேண்டும் என்று நினைத்து போட்டியிடவில்லை. மக்களுக்கு இதையெல்லாம் செய்தால் நன்றாக இருக்கும் என்று எனக்கு தோன்றியது. அதற்காக இப்போது மூன்றாவது முறையாக தேர்தலில் நிற்கிறேன்.
ஒரு கட்சி சார்பாக போட்டியிட்டால் ஒரு கட்சியின் ஓட்டை மட்டும்தான் வாங்க முடியும். நான் சுயேட்சையாக நிற்பதால் அனைத்து கட்சியை சேர்ந்தவர்களும் இந்த முறை பாலாவுக்கு ஓட்டு போடலாம் என்று சொல்லியிருக்கிறார்கள். நிச்சயம் இந்த முறை நான் ஜெயிப்பேன்" எனத் தெரிவித்தார்.