ஆன்லைன் விளையாட்டிற்காக, பெற்றோர்களுக்குத் தெரியாமல் மூன்றே மாதத்தில் 90 ஆயிரத்தை பள்ளிச் சிறுவன் செலவு செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில், 12 வயது சிறுவன் கரோனா நோய்த்தொற்று பொதுமுடக்கம் காரணமாக வீட்டில் இருந்த நிலையில், மொபைலில் ஆன்லைன் கேம்களை விளையாட ஆரம்பித்துள்ளார். பெற்றோர்களும் சிறுவன் அமைதியாக வெளியே செல்லாமல் இருப்பதால் இதனைக் கண்டுகொள்ளாமல் விட்ட நிலையில், மூன்று மாதங்களுக்குப் பிறகு வங்கிக் கணக்கில் இருந்த 90 ஆயிரம் ரூபாய் காணாமல் போனதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் வங்கியில் பண பரிவர்த்தனை தொடர்பான தகவல்களைக் கேட்ட பொழுது, மூன்றே மாதத்தில் சிறிய சிறிய தொகையாக 90,000 ரூபாய் வங்கிக் கணக்கில் இருந்து எடுக்கப்பட்டது தெரியவந்தது.
இதுதொடர்பாக அந்தச் சிறுவனிடம் பெற்றோர்கள் விசாரிக்கையில், ஆன்லைன் கேம் விளையாடுவும், ஆன்லைன் கேம்களை அப்டேட் செய்வதற்காகவும் வங்கிக் கணக்கை இணைத்துள்ளார். அதேபோல் வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்கப் பட்டதற்கான குறுஞ்செய்தியை அவ்வப்போது அழித்தும் வைத்துள்ளார். இதனால் இந்த விஷயம் பெற்றோர்களுக்குத் தெரியாத நிலையில், இறுதியாக 90 ஆயிரம் ரூபாய் செலவிடப்பட்டது தெரியவந்தது.
தவறு செய்த சிறுவனுக்கு பெற்றோர்கள் 1 லிருந்து 90 ஆயிரம் வரை எழுத எழுதச்சொல்லி தண்டனை வழங்கியுள்ளனர். ஆன்லைன் விளையாட்டுகள் மட்டுமல்ல, அனைத்துவிதமான இணைய சேவைகளையும் அப்டேட் செய்வதற்காக, வங்கிக் கணக்குகளை இணைப்போம். ஆனால் அடுத்த முறை, அப்டேட் செய்யப்படும் பொழுது தானாகவே இணைக்கப்பட்ட வங்கி கணக்கிலிருந்து பணம் எடுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதால், கூடுதல் விழிப்புணர்வுடன் விதிமுறைகளைப் படித்த பிறகு ஆன்லைன் சேவைகளில் வங்கிக் கணக்குகளை இணைக்க வேண்டும் எனத் துறைசார்ந்த வல்லுனர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.