குட்கா போன்ற போதைப் பொருட்கள் தடை செய்யப்பட்டிருந்தாலும் மறைமுக வியாபாரம் அமோகமாக உள்ளது. ஊரடங்கு அறிவிக்கப்பட்டு கடைகள் மூடப்பட்டிருந்த நிலையில், ரூ.10 -க்கு விற்ற புகையிலை பொருட்கள் ஒரு பாக்கெட் ரூ,150 வரை விற்பனை செய்யப்பட்டது. கரோனா ஊரடங்கு போதைப் பொருட்களின் வியாபாரிகளுக்கு அதிக வருமானத்தை கொடுத்தது. இந்தத் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை திருச்சியிலும் புதுக்கோட்டையிலும் மொத்த குடோன்களில் தேக்கி வைத்து கடைகளுக்கு சப்ளை செய்து வருகின்றனர்.
இந்தநிலையில் திருச்சி திட்டமிட்ட குற்றங்கள் நுண்ணறிவுப் பிரிவினர் புதுக்கோட்டை மாவட்டத்தில் திடீர் ஆய்வில் ஈடுபட்டனர். அவர்களுக்கு கிடைத்த தகவலின்படி கீரனூரில் ஒரு குடோனில் குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிப்பதை கண்டறிந்தனர். அங்கே பழைய நகைகடை முதலாளி காதர் மைதீன் (51) மற்றும் அப்துல் சலாம் (42) ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த சுமார் அரை டன் குட்கா பொருட்களையும் கைப்பற்றனார்கள்.
தொடர்ந்து நடத்திய விசாரணையில், அவர்களுக்கு வெளி மாவட்டங்களில் இருந்து குட்கா பொருட்கள் மொத்தமாக வருவதாகவும் அதை இந்த குடோனானில் இறக்கி அப்துல் சலாம் செய்யும் பிஸ்கட் வியாபாரத்துடன் குட்கா பொருட்களையும் வாகனங்களில் ஏற்றிச் சென்று கடைகளுக்கு கொடுப்பதாகவும் கூறியுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களையும் பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருட்களையும் கீரனூர் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். மேலும் மொத்தமாக குட்கா வாங்கி குடோனில் பதுக்கி வைத்து விற்பனை செய்யும் நபர்களைப் பட்டியல் எடுத்து ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளனர்.