உலகநாடுகளை அச்சுறுத்தலில் வைத்திருக்கும் கரோனாவின் தாக்கம் இந்தியாவையும் எட்டிப் பார்த்திருக்கிறது. மத்திய மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் மருத்துவம் உள்ளிட்ட பல கட்ட தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதற்கேற்ப பொது இடங்களில் மக்களின் நடமாட்டம் வெகுவாகக் குறைந்துள்ளது.
தற்போது தமிழகத்தில் பெரிய ஜவுளி மற்றும் நகை அங்காடிகள் மூடப்படவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கரோனா வைரசின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள ஆங்காங்கே கைகழுவுதல், கிருமி நாசனி தெளித்தல், முகக்கவசம் வழங்கும் முகாம்கள் உள்ளிட்ட பல்வேறு மருத்துவரீதியான முறைகளை அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன.
இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தின் நாங்குனேரி பேருந்து நிலையம் அருகிலுள்ள ஒரு தனியார் ஹோட்டலின் வாயிலில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக கடந்த சில நாட்களாக வேப்பிலை தோரணம் கட்டித் தொங்கவிட்டுள்ளனர். அத்துடன் கயிற்றால் வெண்சங்கு எலுமிச்சம்பழம் சேர்த்துக் கட்டி தொங்க விடப்பட்டுள்ளன.
ஆனால் அறிவியல் வட்டாரமோ வேப்பிலை என்பது கிருமிகள் பரவுவதைத் தடுக்கும் ஆற்றல் கொண்ட கிருமி நாசினி என இயற்கையிலேயே மக்களால் நம்பப்படுகிறது என்கின்றனர். அதனாலேயே முந்தைய காலம் தொட்டு இன்று வரை கிராமங்கள் தோறும் நடக்கும் கோயில் கொடை விழாக்கள் பொது மக்கள் கூடும் திருவிழாக்கள் தெருக்களில் வேப்பிலை தோரணம் கட்டுவதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர். தவிர வேப்பிலை, வேப்பமரம் போன்றவைகள் பெண்களால் தெய்வமாக வணங்கப்பட்டும் வருகிறது. மேலும் வெண்சங்கு எலுமிச்சை பழம் கண்திருஷ்டிக்காக தொங்கவிடப்படும் பொருள் என்பதும் மக்களின் நம்பிக்கை.
இந்த நிலையில் கரோனா வைரசை விரட்ட இந்த வேப்பிலை தோரணம் உதவுமா என்பது அந்தப் பகுதியினரின் எதிர்பார்ப்பு.