கன்னியாகுமரியில் மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவரை அரசு பேருந்து ஓட்டுநரும், நடத்துநரும் கொடூரமாக தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகிய நிலையில் இருவரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகேயுள்ள அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். மனநலம் பாதிக்கப்பட்ட இவர் குலசேகரம் அருகே உள்ள ஆற்றூரில் இருந்து மாசாணம் செல்லும் அரசு பேருந்தில் ஏறியுள்ளார். அப்பொழுது நடத்துநர் பணம் கேட்ட பொழுது மணிகண்டன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் நடத்துநர் காந்தி மற்றும் ஓட்டுநர் பத்மகுமார் ஆகியோர் பேருந்திலேயே வைத்து மனநலம் பாதிக்கப்பட்ட மணிகண்டனை கொடூரமாக தாக்கினர்.
இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகிய நிலையில், தாக்குதலை நடத்திய நடத்துநர் காந்தி மற்றும் ஓட்டுநர் பத்மகுமார் ஆகிய இருவரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அரசு போக்குவரத்துக் கழக பொது மேலாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மீது துறை ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகளிடம் வன்முறை போக்கோடு நடந்து கொள்ளும் நடத்துநர், ஓட்டுநர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.