பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் நடந்துள்ள இமாலய மோசடிகள் தொடர்ந்து அம்பலமாகி வருகிறது.
மயிலாடுதுறை அருகே உள்ள செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழ்மாத்தூர், மேல்மாத்தூர் வள்ளுவபுள்ளி, ஆசான்தட்டை உள்ளிட்ட கிராமங்களில் 2017-18 ஆண்டுகளில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் சுமார் 40 நபர்களுக்கு விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து அதிகாரிகள் செல்லாமலேயே ஏஜெண்டுகள் சிலரை வைத்து பயனாளிகளின் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, உங்க வீடுகளை நாங்களே கட்டித் தருகிறோம், நீங்கள் எதுவும் செய்ய வேண்டாம், வங்கி கணக்கு துவங்க கையொப்பம் இடுவது மட்டம்தான் உங்க வேலை, அதற்கான ஏடிஎம் கார்டையும் நாங்கள் எடுத்துக் கொள்வோம், உங்களுக்கு எந்த சிரமத்தையும் நாங்கள் தரமாட்டோம் என்று குளிர்ச்சியாக பேசியுள்ளனர்.
அந்த கிராமத்து மக்களோ செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியத்திலிருந்து தான் வந்திருக்காங்க என நம்பி அனைத்திலும் கையோப்பம் போட்டு கொடுத்துள்ளனர். வீட்டு வேலைகளை துவங்கி பாதியோடு சென்றவர்கள் மூன்று ஆண்டுகள் கடந்தும் யாருமே கண்டுக்கொள்ளவில்லை என யூனியனில் கூறினர், அவர்களோ கைவிரித்துவிட்டனர்.
அதன்பிறகே இந்த சித்து வேலையை செய்தவர் வள்ளுவர்புள்ளியை சேர்ந்த ரமேஷ் என்கிற காண்ட்ராக்டர் என்பதை தெரிந்துகொண்டு அவர் மீது செம்பனார்கோவில் காவல் நிலையத்தில் கடந்த டிசம்பர் மாதம் புகார் அளித்தனர்.
போலீசார் விசாரணை நடத்தியதில் அந்த ரமேஷ் 2020 ஆகஸ்ட் மாதத்திற்குள் வேலையை முடித்து தருவதாக கூறிவிட்டு சென்றார். அதன்பிறகு இது நாள் வரை அந்த பக்கமே செல்லவில்லை. ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்கவில்லை, காவல்துறையினரும் நடவடிக்கை எடுக்கவில்லை, என மீண்டும் மக்கள் ஒன்றுகூடி போராட்டத்திற்கு ஆயத்தமாகிவருகின்றனர்.
கோடிக்கணக்கில் முறைகேடு நடந்துள்ளது. சம்மந்தமே இல்லாத காண்ட்ராக்டர் கோடிகணக்கில் மக்களுக்கு சேரவேண்டிய அரசு பணத்தை சுருட்டியது ஆதாரத்தோடு தெரிந்தும் அவர்களை காப்பாற்றுவது என்ன கடமையோ என்கிறார்கள் சமுக ஆர்வலர்கள்.