தவறான உறவுக்குத் தடையாக இருந்த மகனைக் கொலை செய்த ஆண் நண்பனைக் காட்டிக்கொடுக்காத தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த பர்கூர் தாலுகா அருகே உள்ள கொட்லெட்டி கிராமத்தில் உள்ளது மல்லேஸ்வரன் மலை அடிவாரம். கடந்த பிப்ரவரி மாதம் 8ஆம் தேதி மல்லேஸ்வரன் மலைக்கு விறகு பொறுக்கச் சென்றவர்கள் அங்கு 10 வயது சிறுவன் காட்டில் சடலம் கிடப்பதாக போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். உடனடியாக பர்கூர் டிஎஸ்பி தங்கவேலு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிறுவனின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். சிறுவனின் உடலில் பல இடங்களில் பிரம்பால் அடித்த காயங்கள் இருந்தது. அதே போல் தீ காயமும் இருந்தது. சிறுவனின் தலையில் மொட்டை அடிக்கப்பட்டு இருந்தது. இப்படிப் பல கொடுமைகள் செய்யப்பட்டு அந்த சிறுவன் கொலை செய்யப்பட்டது தெரிய வந்ததை அடுத்து உடற்கூறு ஆய்விலும் இது கொலை என்பது உறுதியானது.
இது தொடர்பான சிறுவனின் புகைப்படம் அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து பெங்களூரு பிடிஎம் லேஅவுட் பகுதியைச் சேர்ந்த தனலட்சுமி என்பவர் தனது பேரனைக் காணவில்லை என்று ஆகஸ்டு 25ஆம் தேதி காவல்நிலையத்தில் புகார் மனு கொடுத்துள்ளது தெரியவந்தது அவரிடம் பர்கூரில் கொலை செய்யப்பட்டுக் கிடந்த சிறுவனின் புகைப்படத்தை போலீசார் காண்பித்துள்ளனர். அப்போது தான் தெரிந்தது அவர் தன்னுடைய பேரன் என்பது. இதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் சிறுவன் ராகுலை அவரது தாய் நதியாகவும் ஆண் நண்பர் சுனில் குமார் மற்றும் அவனின் மற்றொரு காதலி சிந்து ஆகியவர் அடித்துத் துன்புறுத்தியது தெரியவந்தது.
தொடர்ந்து அவர்கள் 3 பேரும் கைது செய்யப்பட்டனர். பெங்களூருவைச் சேர்ந்த நதியாவுக்கு ரவி என்பவருடன் திருமணமாகி ராகுல் பிறந்த நிலையில், ராகுல் 3 மாத குழந்தையாக இருந்தபோதே நதியாவை விட்டு கணவர் ரவி பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது. இதனையடுத்து குற்ற வழக்குகளில் தொடர்புடைய சுனில்குமார் என்பவருடன் நதியாவிற்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ராகுல் வளர வளர தங்களுக்கு இடைஞ்சலாக இருப்பதாக கருதி சுனில்குமாரும் நதியாவும் பல ஆண்டுகள் கொடுமைகளைச் செய்துள்ளனர். இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 7ஆம் தேதி நதியா வீட்டில் இல்லாதபோது சுனில்குமார் சிறுவனைத் தாக்கியுள்ளான். தாக்குதலில் ராகுல் இறந்துவிட சிந்துவுடன் சேர்ந்து கொட்லெட்டி மலைப் பகுதியில் உடலை வீசி சென்றது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த கொலை குறித்து நதியாவிடம் சுனில்குமார் தெரிவித்துள்ள நிலையில், சிறுவனின் பாட்டி பேரன் குறித்து விசாரித்தபோது மகன் கொலை செய்யப்பட்டதை நதியா மறைத்துள்ளார். ஆனால் இறுதியாக போலீசார் விசாரணையில் சுனில்குமார், நதியா, சிந்து ஆகியோர் சிக்கி தற்பொழுது கைதாகியுள்ளனர்.