கடந்த ஆண்டு இதேநாள் கோவை, மேட்டுப்பாளையம் நடுவூரில் ஆதிதிராவிடர் காலனியில் பெய்த கனமழையில், வீட்டின் மிகப்பெரிய சுற்றுச்சுவர் இடிந்து, ஒட்டியிருந்த ஓட்டு வீடுகள் மீது விழுந்தது. இந்த விபத்தில், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 17 பேர் உறக்கத்திலேயே உயிரிழந்தனர். தமிழகத்தையே உலுக்கியது இந்தச் சம்பவம்.
இடிந்து விழுந்தது 'தீண்டாமை சுவர்' என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டிய நிலையில், பல்வேறு அரசியல் தலைவர்களும் சம்பவம் நடந்த இடத்திற்குச் சென்று, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் சொல்லினர். அந்த நேரத்தில் பெற்றோர்களை இழந்த சிறுமி ஒருவர் ''எங்களுடைய அப்பா இந்த விபத்தில் இறந்துவிட்டார். எங்களுடைய புத்தகங்களும் விபத்தில் சிக்கிவிட்டது. எங்களுக்குப் படிக்க ஏற்பாடு செய்தால், எப்படியாவது படிச்சு என் அம்மாவ காப்பாத்திப்புடுவேன்'' எனக் கண்ணீர் மல்க கூறியது அனைவர் மனதையும் நனைத்தது. இந்தச் சம்பவம் நடைபெற்று சரியாக ஒரு வருடம் கழிந்துவிட்டது.
இந்தச் சம்பவத்தில், உயிரிழந்த 17 பேரின் முதல் நினைவுநாள் இன்று அங்கு அனுசரிக்கப்பட்டது. ஆதிதிராவிடர் காலனி பகுதிக்குள் நுழைய தடைவிதித்திருந்ததால், தனித் தனிக் குழுவாகச் சென்ற அரசியல் கட்சியினர் மற்றும் சமூக இயக்கத்தினர் அஞ்சலி செலுத்தினர். மேலும், சுவர் இடிந்து விபத்து ஏற்பட்ட இடத்தில் மீண்டும் சுவர் எழுப்பப் பட்டுள்ளதை எதிர்த்து, தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திராவிடர் பண்பாட்டுக் கூட்டியக்கம் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் 100 -க்கும் மேற்பட்டோர் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், கைது செய்யப்பட்டனர். அதேபோல், மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டவர்களையும் போலீசார் கைது செய்தனர்.