Skip to main content

பிறந்த நாளிலிருந்து 19 வயதான இன்றுவரை பால் பவுடரே உணவு;கவலையில் மாற்றுத்திறனாளி இளைஞரின் குடும்பம்!!

Published on 20/09/2020 | Edited on 20/09/2020
incident in koothanallur

 

பிறந்த நாளிலிருந்து இன்று வரை பால்பவுடரை மட்டுமே குடித்து உயிர் வாழ்ந்து வருகிறார் 19 வயதுடைய மாற்றுத்திறனாளி இளைஞன், அவரது நிலையை கண்டு தினம் தினம் மனம்நொந்து போகிறது அவரது குடும்பம்.

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள லட்சுமாங்குடியை சேர்ந்தவர் கண்ணன். இவருக்கு பாக்கியலெட்சுமி, கயல்விழி, கன்னிகா ஆகிய மகள்களும், கலையரசன் (19) கலைவாணன் 17 ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். இவருடைய மனைவி தங்கசெல்வி மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு எட்டு ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார்.

மூத்த மகனான கலையரசன் பிறக்கும்போதே கண், மூக்கு மற்றும் உதடுகள் மூடிய படியே பிறந்ததால், அந்த நேரத்தில் தாய்ப்பால் கூட குடிக்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டிருக்கிறார். மகனின் நிலமையை கண்டு வேதனையடைந்த கலையரசனின் தந்தை கண்ணன் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்திருக்கிறார். அதன் பின்னர் பேச ஆரம்பித்து தற்போது கிராம மக்களிடையே அழகாக பேசியும் பாட்டு பாடியும் வருகிறார்.

 

incident in koothanallur


ஆனாலும் சிறுவயதாக இருக்கும்போதே வாயும் உதடும் ஒன்றாக இருந்ததால் தற்போது வரை பால்பவுடர்களை மட்டுமே  குடித்து உயிர் வாழ்ந்து வருகிறார். மற்றபடி இட்லி, தோசை, சாதம் போன்ற உணவுகளை  உட்கொள்ளுபடியாக  அவருடைய வாய் அமைப்பு இல்லாததால் பிறந்த நாள் முதல் இன்றுவரை பால் பவுடரை மட்டுமே உணவாக உண்டு உயிர்வாழ்ந்து வருகிறார். கலையரசனுக்கு உதவியாக தங்கை கன்னிகா படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு கவனித்து கொண்டிருக்கிறார்.

இது குறித்து  கலையரசனின் அக்கா பாக்கியலட்சுமி கூறுகையில்," எங்க அப்பா  கூலி வேலை செய்து அதில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டுதான்  எங்க குடும்பமே நடக்குது. கரோனாவால் இப்போ வேலை ஏதும் இல்லாம குடும்பத்தை நடத்தவே போதிய வருமானம் இல்லாமல் தவிக்கிறோம். கலையரசனுக்கு வயதும் ஆகிவிட்டதால் அதிகபால் பவுடர் தேவைபடுது. அதை வாங்ககூட முடியாத நிலமையாகிடுச்சி. தம்பி பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு காய்கறி கடையில் வேலை பார்த்து அதில் வரும் வருமானத்தை கொண்டு பால்பவுடர் வாங்கி கொடுத்து வருகிறான். தமிழக அரசு எனது தம்பியின் நிலையறிந்து உதவி செய்திட வேண்டும்." என்றார்.

 

சார்ந்த செய்திகள்