தினம் தினம் கடலில் செத்து செத்து பிழைக்கிறான் தமிழக மீனவன். இவனை பாதுகாக்க வழியில்லாத, எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளாத இந்திய அரசு, அண்டை நாட்டுக்கு ஓடி ஓடி உதவி செய்வதாக உள்ளம் குமுறுகின்றனர் ராமேஸ்வரம் மீனவர்கள்.
விஷயம் என்னவென்று விசாரித்தால், மோடி ஆட்சிக்கு வந்த பிறகு மீன்பிடித் தொழில் முற்றிலும் நலிவடைந்து விட்டதாக வேதனையை வெளிப்படுத்தினர். அவர்களே தொடர்ந்து, “எல்லை தாண்டிய குற்றச்சாட்டில் பறிமுதல் செய்யப்பட்ட 180-க்கும் மேற்பட்ட படகுகள் அங்க (இலங்கை) கிடக்கு. அதை மீட்க துப்பு இல்லாத இந்த அரசாங்கம், இலங்கை மீனவர்களுக்கு இப்ப புதுசா 150 படகுகளையும், 150 படகுகளுக்கான இயந்திரங்களையும் வழங்கி இருக்கு. இது எப்படி இருக்குன்னா சொந்த நாட்டுக்காரன் சாகட்டும், அண்டை நாட்டுக்காரன் வாழட்டும் அப்டீங்கிற மாதிரி இருக்கு. கச்சத்தீவை தாண்டி கொஞ்ச தூரம் சென்றாலே, இலங்கை கடற்படையும், சிங்கள மீனவர்களும் நம்மளை விரட்டி விரட்டி அடிக்கிறாங்க. ஆனால், இந்திய அரசங்காம் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள கரைதுறைபற்று பிரதேசத்தில் வசிக்கும் மீனவ மக்களுக்கு படகு கொடுத்திருக்காங்க.” இதை எப்படி ஏத்துக்க முடியும் என்கின்றனர் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள்.
"டீசல் மானியத்தை உயர்த்தி வழங்க கோரியும், படகுகளை மீட்டுத் தரக்கோரியும் நாங்க தொடர்ந்து போராடி வருகிறோம். ஆனால், எங்க குறையை கேட்க துப்பு இல்லாத இந்த மோடி அரசாங்கம், எதிரி நாட்டுக்காரனுக்கு ஓடி ஓடி உதவி செய்கிறது என்றார் மீனவ சங்க பிரநிதி.
தானமும், தர்மமும் தனக்கு போகத்தான்.. இது மோடி அரசுக்கு எப்போது புரிய போகுதோ.!