கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகில் உள்ளது அரும்பாக்கம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் ஜோதிமணி. இவர் ரிஷிவந்தியம் அருகே உள்ள பகண்டை கூட்ரோடு அப்பகுதியில் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் வாங்கி விற்கும் 'ஆட்டோ கன்சல்டிங்' கம்பெனி வைத்து நடத்தி வருகிறார்.
கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருக்கோவிலூர் புறவழிச்சாலைப் பகுதியில் உள்ள அரும்பாக்கம் கிராம எல்லையில், சாலையோரம் புதிதாக இடம் வாங்கி புதிய வீடு கட்டி குடியிருந்து வருகிறார். அந்த வீட்டில் ஜோதிமணி அவரது மனைவி சாந்தா மற்றும் அவரது தந்தை நந்தகோபால், மூன்று வயதுக் குழந்தை ஆகியோருடன் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு அனைவரும் சாப்பிட்டு விட்டு படுத்து தூங்கி விட்டனர். அதிகாலை ஒன்றரை மணியளவில் முகமூடி அணிந்த கொள்ளையர்கள் 5 பேர் வீட்டிற்குள் புகுந்துள்ளனர். அப்போது சத்தம் கேட்டு ஜோதிமணி எழுந்து பார்த்துள்ளார். உடனே கொள்ளையர்கள் கத்தி முனையில் ஜோதிமணியை மிரட்டி பீரோ சாவியைப் பிடுங்கி அதில் பீரோவில் இருந்து 20 பவுன் நகைகள், கால் கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் பணம் ஆகியவற்றைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இவற்றின் மதிப்பு 10 லட்சம் என்று கூறப்படுகிறது. ஜோதிமணி கொடுத்த புகாரின் பேரில், போலீஸார் கொள்ளை சம்பவம் நடந்த அவரது வீட்டை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது, கொள்ளை தொடர்பான தடயங்களும் சேகரிக்கப்பட்டன. மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் கொள்ளையர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
கார் விற்பனையாளரின் வீட்டுக்குள் புகுந்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.