மதுரையின் முன்னாள் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. நன்மாறன் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். மூச்சுத்திணறல் காரணமாகக் கடந்த புதன் கிழமை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் எம்.எல்.ஏ. நன்மாறன் (74) நேற்று உயிரிழந்தார்.
2001 முதல் 2011 ஆம் ஆண்டுவரை இருமுறை மதுரை கிழக்கு தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக நன்மாறன் இருந்துள்ளார். கறைபடியா கரங்களுக்குச் சொந்தக்காரராக இருந்த நன்மாறன் இறுதிவரை வாடகை வீட்டிலேயே வசித்து வந்தார். மதுரையில் அனைத்து தரப்பினரின் அன்பையும் பெற்றவர் நன்மாறன். மேடைக் கலைவாணர் என்ற அடைமொழியுடன் போற்றப்பட்ட நன்மாறனின் மறைவு அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் இரங்கல் தெரிவித்தனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘எளிமைப் பண்பாலும் அயராத உழைப்பாலும் அனைத்துத் தரப்பினரின் நன்மதிப்பையும் பெற்றவர்; இலக்கிய நயத்தால் ‘மேடைக் கலைவாணர்’ எனப் பெயர்பெற்ற மதுரையின் மாணிக்கம்; என் இனிய நண்பர் நன்மாறன் அவர்களின் மறைவு அதிர்ச்சியளிக்கிறது. அவரை இழந்து தவிக்கும் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்’ என இரங்கல் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், மதுரை, புதிய எல்லியஸ் நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ. நன்மாறனின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.