திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியத்திலுள்ள கிராமம் கரைப்பூண்டி. இந்த கிராம ஊராட்சியின் மன்றத் தலைவராக இருப்பவர் இந்திரா பாலமுருகன். இவர்மீது தொடர்ச்சியாக மாவட்ட ஆட்சியருக்கு புகார்கள் சென்றன. அந்த ஊராட்சியின் 2வது வார்டு உறுப்பினர் வேலு, 8வது வார்டு உறுப்பினர் பிரபாகரன் இருவரும் எழுத்துப்பூர்வமாக புகார் தந்தனர்.
அந்த புகார்கள் ஊரக வளர்ச்சித்துறைக்கு வந்தன. அந்தப்புகார்கள் குறித்து ஊரக வளர்ச்சித்துறையின் கூடுதல் ஆட்சியர் பிரதாப் விசாரணை நடத்த உத்தரவிட்டார். அதன்படி ஊராட்சிகள் செயலாளர் அறவாழி, சேத்துப்பட்டு ஊராட்சியின் ஆணையாளர்கள் ரேணுகோபால், கோவிந்தராஜீலு, செயற்பொறியாளர் கோவிந்தன் போன்றோர் நேரடியாக பஞ்சாயத்து அலுவலகம் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் தெரு மின்விளக்கு ஃலைட்கள் மாற்றப்படாமலே மாற்றியதாக பில் வைக்கபட்டிருந்தது, குடிநீர் மோட்டார்கள் பழுதென போலி பில்கள் என பலமுறைகேடுகள் நடைபெற்றதற்கான ஆதாரங்கள் சிக்கியது.
2021 ஏப்ரல் மாதம் முதல் 2022 மார்ச் மாதம் இறுதி வரையிலான செலவுகளுக்கான பில் எதுவும் முறையாக இல்லாமல் இருந்தது. ஆனால் காசோலை மூலமாக ஆயிரக்கணக்கில் பணம் எடுத்துள்ளனர். அதுவே சில லட்சங்களாகியுள்ளது. இதுபற்றி ஊராட்சி மன்றத் தலைவரிடம் விசாரித்தபோது, சரியான பதில் இல்லையென மாவட்ட ஆட்சித் தலைவருக்கு அறிக்கை அனுப்பினர். ஊராட்சி மன்றத் தலைவரின் அதிகாரம் பறிக்கப்பட்டு தனி அலுவலராக சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ரேணுகோபாலை நியமித்து ஏப்ரல் 19ஆம் தேதி உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில் கடந்த 23ஆம் தேதி இந்திரா பாலமுருகன், ஊராட்சி செயலாளர் நித்தியானந்தத்தை செல்போனில் தொடர்புகொண்டு, ஒழித்துவிடுவேன், கை, கால் உடைச்சிடுவன், தனி அதிகாரின்னா அவன் கேட்டான்னு என் ஆபிஸ்ல இருக்கற ரெக்கார்டுகளை நீ எப்படி எடுத்துக்கிட்டு போகாலாம், அவன் தனி அதிகாரின்னா இங்க ஆபிஸ்க்கு வந்துதானே பார்க்கனும் என மிரட்டும், ஆடியோ சமூகவலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரசு அதிகாரிகளை மிரட்டியது, பணி செய்யவிடாமல் தடுத்தது என புகார் தரப்பட்டுள்ளது. தற்போது மிரட்டல் வழக்கில் ஊராட்சி மன்ற தலைவரை போலீஸார் தேடிவருகின்றனர்.