நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தமிழகம் முழுவதும் ஆளும் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அபார வெற்றி பெற்றுள்ளன. சேலம் மாநகராட்சியில் உள்ள 60 கோட்டங்களில் தி.மு.க. கூட்டணி 50 வார்டுகளிலும், அதிமுக 7 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளன. சுயேச்சைகள் 3 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளனர். இந்நிலையில், சேலம் மாநகராட்சித் தேர்தலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் வெற்றி பெற்றுள்ள சுவாரஸ்யமான நிகழ்வும் அரங்கேறியிருக்கிறது.
தி.மு.க. சார்பில், சேலம் மாநகராட்சி 41- வது வார்டில் பூங்கொடி சேகர், அவருடைய மகள் க.கனிமொழி 54- வது வார்டிலும் போட்டியிட்டனர். இவர்கள் இருவருமே வெற்றி பெற்றனர்.
கனிமொழியின் மாமன் எம்.அசோகன், 52- வது வார்டில் தி.மு.க. சார்பில் களமிறங்கினார். அவரும் அபார வெற்றி பெற்றார். கனிமொழிக்கு ஆதரவாக அசோகனும் பரப்புரையில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகள், உறவினர் வெற்றி பெற்ற நிகழ்வு தி.மு.க. தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.