சிவகங்கையில் தனியார் கல்லூரி பேருந்தை நிறுத்தி குடிபோதையில் ரகளை செய்த இளைஞர்களைப் போலீசார் தேடிவருகின்றனர்.
கரோனா கட்டுப்பாடுகளுக்குப் பிறகு பள்ளிகள், கல்லூரிகள் படிப்படியான தளர்வுகளுக்கிடையே திறக்கப்பட்டுவருகின்றன. சென்னை உள்ளிட்ட பகுதிகளில் நீண்ட நாட்களுக்குப் பிறகு கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளதால் கொண்டாட்டங்களில் ஈடுபடும் மாணவர்கள் மோதல் போக்கிலோ அல்லது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலோ நடந்துகொள்ளலாம் என போலீசார் தீவீர கண்காணிப்பில் ஈடுபட்டுவருகின்றனர். நேற்று (14.10.2021) ஆவடி ரயில் நிலையத்தில் புத்தகப்பையில் கற்களை எடுத்துச்சென்ற மாணவன் ரயில்வே போலீசாரால் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டார். அதேபோல் சென்னையில் பல பகுதிகளில் 'ரூட்டு தல' என்ற பெயரில் கல்லூரி மாணவர்கள் மோதிக்கொள்ளும் போக்கு தற்போதுவரை நடைபெறுகிறது.
இது ஒருபுறம் இருக்க, கிராமப்புறங்களிலும் இதேபோன்ற செயல்கள் நடைபெற்று அதுதொடர்பான வீடியோக்கள் அனுதினமும் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திவருகின்றன. அந்தவகையில், சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பகுதியில் உள்ள குமாரக்குறிச்சி என்ற கிராமத்தில் சாலையில் சென்ற தனியார் கலைக்கல்லூரிப் பேருந்தை வழிமறித்த போதை இளைஞர்கள் சிலர், மதுபாட்டிலை பேருந்தின் முன் வைத்து நடனமாடி இடையூறு செய்யும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது. இது தொடர்பாகக் கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் அந்த இளைஞர்கள் மீது வழக்குப் பதிவுசெய்து தேடிவருகின்றனர் இளையான்குடி போலீசார்.