Skip to main content

நீட் பயிற்சி மையத்தில் மாணவர்களுக்கு நடந்த கொடுமை; சிசிடிவியில் வெளியான பகீர் காட்சி!

Published on 18/10/2024 | Edited on 18/10/2024
Incident happened of students at NEET coaching center in tirunelveli

இந்தியாவில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு நீட் ( NEET - National Entrance Eliglibilty Entrance Exam) எனப்படும் நுழைவுத் தேர்வு ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது. மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவோடு ஏராளமான மாணவர்கள், தனியார் நீட் பயிற்சி மையத்திற்கு சென்று நீட் தேர்வுக்காக பயின்று தேர்வுகளை எழுதி வருகிறார்கள். இந்த நிலையில், நீட் தேர்வுக்கு பயின்று வரும் மாணவர்களை பிரம்பால் அடித்தும், காலணிகளை வீசியும் பயிற்சியாளர் செய்த சித்ரவதை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர் ஜலாலுதீன். இவர், திருநெல்வேலி மாவட்டத்தில் தனியார் நீட் பயிற்சி மையம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த மையத்தில் படிக்கும் மாணவர்களுக்கு, ரூ.60,000 முதல் ரூ.80,000 வரை கட்டணம் வசூலிக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. ஆண், பெண் என இருபாலருக்கும் விடுதிகள் அமைக்கப்பட்டு, நாள்தோறும் காலை 8 மணி முதல் மாலை 8 மணி வரை இங்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. 

கடந்த சில நாட்களுக்கு முன்பு, இந்த பயிற்சி மையத்தில் படிக்கும் மாணவர்கள் சிலர், வகுப்பில் ஆசிரியர் வருவதற்கு முன்பு சற்று தூங்கியுள்ளனர்.  இதனை கண்ட பயிற்சி மைய உரிமையாளர் ஜலாலுதீன், மாணவர்களை வரிசையாக பிரம்பால் அடித்து சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால், மாணவர்களுக்கு ரத்த காயம் ஏற்பட்டுள்ளது. மாணவர்களை பிரம்பால் அடித்து துன்புறுத்தும் இந்த சம்பவம், அங்கு பொறுத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளில் பதிவாகியிருந்தது. 

அதே போல், மாணவி மீது ஜலாலுதீன் காலணிகளை வீசும் சம்பவம் தொடர்பான வீடியோவும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவி ஒருவர் அவருக்கான இடத்தில் காலணியை கழட்டி வைக்காமல் வேறு இடத்தில் கழட்டி வைத்துள்ளார். இதனை கண்டு ஆத்திரமடைந்த ஜலாலுதீன், வகுப்பிற்கு வந்து காலணியை எடுத்து மாணவியை நோக்கி வீசி அதனை எடுத்து உரிய இடத்தில் வைக்கும்படி கூறியுள்ளார். உடனடியாக, அந்த மாணவியும் காலணியை எடுத்து அந்த இடத்தில் வைத்துள்ளார். இந்த சம்பவங்கள் தொடர்பாக மேலப்பாளையம் காவல் நிலையத்தில் மாணவ, மாணவியர்கள் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

சார்ந்த செய்திகள்