ஈரோடு மாவட்டம், திண்டல், செங்கோடம்பாளையம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார் வாசுதேவன். இவர் கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு பால் ஏற்றுமதி செய்யும் பணியை ஒப்பந்தத்தின் அடிப்படையில், டேங்கர் லாரி மூலம் நாள்தோறும் விநியோகம் செய்கிறார். இந்த நிலையில் வாசுதேவன் தனது குடும்பத்தினருடன் நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டிலுள்ள அவரது கிராமத்தில் நடந்த கறி விருந்துக்கு, சென்ற ஜூன் 1-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சென்றுள்ளார்.
மறுநாள் வீடு திரும்பிய வாசுதேவன் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் பின்புறக் கதவு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பிறகு அறைக்கு சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு உள்ளே வைக்கப்பட்டிருந்த 44 பவுன் நகைகள், ரூபாய் 70 ஆயிரம் ரொக்கப் பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இதனால் அவர் குடும்பமே அதிர்ச்சி அடைந்தது.
வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்டு இத்துணிகர கொள்ளை நடந்துள்ளது. இது சம்பந்தமாக தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர் எஸ்பி சக்தி கணேசன் உத்தரவின் பேரில், சப்-இன்ஸ்பெக்டர்கள் சங்கர் மற்றும் சகாதேவன் ஆகியோர் தலைமையில் குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது கொள்ளை நடந்த வீட்டின் அருகே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா ஆய்வுகளை போலீசார் பார்வையிட்டனர். அதில் கொள்ளையனின் உருவம் பதிவாகி இருந்தது அதன் அடிப்படையில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
அதில் கொள்ளையனின் அடையாளத்தை கண்டுபிடித்த தனிப்படை சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை தாலுகா, பருத்தி ஊரை சேர்ந்த அண்ணா என்பவர் கொள்ளையடித்தது தெரியவந்துள்ளது. கொள்ளையன் அண்ணா என்பவர் ஈரோடு மாவட்டம், அந்தியூரில் ஹோட்டல் நடத்தி வந்துள்ளார். இவரின் ஹோட்டலுக்கு துணையாக இவரது மனைவி பாண்டியம்மாள் என்கிற தேவிகா இருந்துள்ளார். அவர்களை பிடித்த போலீசார் அவர்களிடமிருந்து திருடுப்போன 44 பவுன் நகை மற்றும் 17 ஆயிரம் ரொக்கப் பணத்தை கைப்பற்றினார்கள். இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதுகுறித்து ஈரோடு எஸ்பி சக்தி கணேசன் கூறும்போது "இந்த குற்ற வழக்கில் சிசிடிவி கேமரா உதவியுடன் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். புலனாய்வில் சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளேன். இதுபோன்ற திருட்டு வழக்குகளில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க குடியிருப்புப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்கள் போலீசாருக்கு பெரிதும் உதவி வருகிறது. ஆகவே பொதுமக்கள் தங்கள் குடியிருப்பு பகுதியில் சாலைகளை பார்த்தவாறு சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும், அதன் மூலம் குற்றச் செயல்கள் விரைவாக கண்டுபிடிக்கப்படுவதோடு, குற்ற செயல்களும் நடைபெறாமல் தடுக்க முடியும்." என்றார்.
சுய தொழிலாக ஹோட்டல் நடத்திய ஒருவர், கரோனா காலத்தில் திருட்டு தொழிலில் ஈடுபட்டதை ஐயோ பாவம்... கரோனா கொடுத்த கொடும் விளைவு என்றுதான் பார்க்க நேரிடுகிறது.