கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே தெற்கு திட்டை ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் 100 குடும்பங்கள் ஆதிதிராவிடர் சமூகத்தை சார்ந்தவர்கள். 600க்கும் மேற்பட்டோர் மாற்று சமூகத்தினர் உள்ளனர். இந்த நிலையில் தற்போது நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி சரவணகுமார், ஊராட்சி மன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆறு உறுப்பினர்கள் கொண்ட இந்த ஊராட்சியில் 1 உறுப்பினர் ஆதிதிராவிடர் மீதி 5 பேர் மாற்று சமூகத்தினர்.
ஊராட்சித் தலைவர் ஆதிதிராவிட சமூகம் என்பதால் குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினத்தன்று தேசியக்கொடி ஏற்றக்கூடாது என்றும் ஊராட்சி மன்றக் கூட்டங்கள் நடைபெறும்போது ஊராட்சி தலைவர் மற்றும் ஆதிதிராவிட ஊராட்சி உறுப்பினர் தரையில் அமர வேண்டும், மற்ற சமூகத்தினர் 5 பேர் நாற்காலியில் அமர வேண்டும் என துணைத்தலைவராக உள்ள மோகன் ராஜன் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் கடந்த சுதந்திர தினத்தின்போது ஊராட்சி மன்ற தலைவரை கொடி ஏற்றவிடாமல் ஊராட்சி செயலாளர் சிந்துஜா மற்றும் துணைத் தலைவர் மோகன்ராஜா தடுத்து தேசியக்கொடியை ஏற்றி உள்ளார்.
இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற ஊராட்சி கூட்டத்தில் ஊராட்சித் தலைவர் தரையில் உட்கார்ந்து கொண்டு மற்றவர்கள் நாற்காலியில் அமர்ந்த புகைப்படம் வெளியாகியது.
இதுகுறித்து ராஜேஸ்வரி கணவரிடம் கேட்டபோது, “சம்பவம் உண்மைதான், கீழ்சாதி என்று தரையில் உட்கார வைக்கிறார்கள். எனது மனைவியை கொடி ஏற்ற விடவில்லை. மேலும் துணை தலைவர் எப்போது சொல்கிறாரோ அப்போதுதான் ஊராட்சி கூட்டத்தை நடத்த வேண்டுமென மிரட்டுகிறார். இது வெளியே தெரிந்தால் எது வேண்டுமானலும் நடக்கும் என மிரட்டுகிறார். இதனால் வெளியே சொல்வதற்கு பயமாக இருந்தது. தற்போது மற்ற ஊராட்சி உறுப்பினர்கள் அவர்கள் சமூகம் என்பதால் அவர்களின் மிரட்டல் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ஊராட்சியை நடத்த எந்த ஒத்துழைப்பும் கொடுக்க மறுக்கிறார்கள்.” என்றார்.
கடந்த ஜூலை மாதம் நடந்த இந்த சம்பவத்தின் புகைபடங்கள் தற்போது வெளியாகியுள்ளது. அதன் மூலம் பல தரப்புகளிலிருந்து ஆதரவு கிடைத்த நிலையில் புவனகிரி காவல் நிலையத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஸ்வரி புகார் கொடுத்துள்ளார்.
இந்நிலையில் தற்போது கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர சகாமுரி, ஊராட்சி செயலாளர் சிந்துஜாவை இடைநீக்கம் செய்துள்ளார். மேலும் துணை தலைவர் மோகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் வெளியான பிறகு துணை தலைவர் மோகனை தொடர்புகொள்ள முடியவில்லை.