உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, இன்று தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டது. அதுபோலவே ஈரோடு மாவட்டத்திலுள்ள 143 டாஸ்மாக் கடைகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டன. ஈரோடு மாநகர் பகுதியில் மட்டும் 23 டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் இயங்க தொடங்கியது. ஒரு கடையில் ஒரு நாளைக்கு 500 டோக்கன் மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் ஆரஞ்சு, இளஞ்சிவப்பு உட்பட ஏழு நிறங்களில் அட்டைகள் குடிமகன்களுக்கு வழங்கப்பட்டன.
இன்று மதுவாங்க வந்தவர்களுக்கு நீல கலர் அட்டை வழங்கப்பட்டது. மது வாங்க வருபவர்கள் முககவசம் அணிந்து வர வேண்டும் என கூறப்பட்டது. குடைகளும் கட்டாயம் கொண்டுவர வேண்டும் என அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது. இதில் பெரும்பாலானோர் முககவசமும் மற்றும் குடை பிடித்தபடி வந்தனர். முககவசம் குடை இல்லாமல் வந்த பலரை போலீசார் திருப்பி அனுப்பினார்கள்.
ஈரோடு பவானி மெயின் ரோட்டில் உள்ள ஒரு மதுக்கடையில் குடிமகன்கள் மதுவை வாங்கிய சந்தோஷத்தில் அதை முத்தமிட்டபடி சென்றனர். இதற்கிடையே அந்த கடைக்கு சுமார் 55 வயதுள்ள ஒரு பெண் மது வாங்க வந்தார். அவர் குடை கொண்டு வரவில்லை. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அந்த பெண்ணை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அப்போது அவர் தனது அண்ணனுக்காக மது வாங்க வந்திருப்பதாகவும், அவரால் நடந்து வர முடியாமல் வீட்டில் படுத்துள்ளதாகவும் அந்த பெண் கூறினார்.
அண்ணன், தங்கை பாசத்தை கேட்டு நெகிழ்ந்து போன போலீசார், அடுத்தமுறை வரும்போது கட்டாயம் குடை பிடித்து வர வேண்டும் குடை இல்லாமல் வந்தால் அடுத்தமுறை அனுமதி கிடையாது என கூறி மது வாங்க அனுமதித்தனர்.
நடக்க முடியாத அண்ணனுக்காக பாசக்கார தங்கை டாஸ்மாக் வரிசையில் நின்று மது பாட்டில்கள் வாங்கிச் சென்றது குடிமகன்களிடம் வியப்பை ஏற்படுத்தியது.