Skip to main content

துப்புரவு செய்த அதே குப்பை வண்டியில் வீட்டுக்கு வந்த உடல்!- ஈரோட்டில் நிகழ்ந்த துயர சம்பவம்!!! 

Published on 09/05/2020 | Edited on 09/05/2020
erode



தூய்மை பணியாளர் ஒருவர் பணிபுரியும் போதே திடீர் மாரடைப்பால் இறந்து போனதும், பரிதாபகரமாக இறந்த அவரின் உடலை அவர் ஓட்டி வந்த குப்பை வண்டியிலேயே மருத்துவமனைக்கும், பிறகு அவரது வீட்டுக்கும் எடுத்துச் சென்ற துயரமான சம்பவம் ஈரோடு மாவட்டத்தில் நடந்துள்ளது.


பவானி அருகே உள்ள அம்மாபேட்டை ஒன்றியம், நெரிஞ்சிப்பேட்டை பேரூராட்சியில் 3-வது வார்டு ஆதி திராவிடர் காலனியில் வசித்தவர் நாச்சி என்பவரின் மகன் பாலன், வயது 45. இவர் கடந்த 13 ஆண்டுகளாக அதே ஊரான நெரிஞ்சிப்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தில் தினக்கூலி அடிப்படையில் தூய்மை பணியாளராகப் பணியாற்றி வருகிறார்.

 

சென்ற 7-5-2020 அன்று காலை 8.30 மணியளவில் பவானி - மேட்டூர் சாலையில் நெருஞ்சிப்பேட்டை அங்காளம்மன் கோயில் தெருவில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். இதைக் கண்ட சக தொழிலாளர்கள் மருத்துவ அவசரத்திற்காக வேறு வழியில்லாமல்  பேரூராட்சியின் அந்த குப்பை வண்டியில் ஏற்றிக்கொண்டு அம்மாபேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். 


அப்போது அந்த மருத்துவமனையில் நிறுத்தப்பட்டிருந்த 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் இருந்த பணியாளர்கள் மாரடைப்பு ஏற்பட்ட பாலனை பரிசோதித்தனர். அப்போதுதான் தெரிந்தது பாலன் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என்பது, சக தொழிலாளர்கள் பேரூராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். இறந்த பாலன் உடலை அவரது வீட்டுக்கு கொண்டு செல்ல கேட்டனர். 108 ஆம்புலன்ஸில் இறந்தவர் உடலை கொண்டு செல்ல மாட்டோம் என மறுத்து விட்டனர். வெளியூரிலிருந்து அமரர் ஊர்தியை உடனே வரவழைக்க முடியவில்லை. ஊரடங்கு என்பதால் தனியார் வாகனங்களும் வர மறுத்து விட்டது. குறிப்பாக பேரூராட்சி அதிகாரிகள் அதற்கான எந்த ஏற்பாட்டையும் செய்யவில்லை.

 

 

ERODE


இதைத்தொடர்ந்து வேறு வழியே இல்லாமல் பேரூராட்சிக்கு சொந்தமான அதே குப்பை சேகரிக்கும் வாகனத்தில் பாலனின் உடலை ஏற்றி நெரிஞ்சிப்பேட்டையில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு சென்றனர். பிறகு அன்று மாலை பாலன் உடல் தகனம் செய்யப்பட்டிருக்கிறது. இறந்த பாலனுக்கு தங்கமணி என்ற மனைவியும், 13 வயது தீனா, பத்து வயது  சுஜீத் என்ற இரண்டு மகன்களும், மாரியம்மாள் என்ற அவரது வயதான தாயாரும் உள்ளார்கள். பாலனின் வருமானத்தை நம்பியே வாழ்ந்து வந்த அவரது குடும்பம்  இப்போது நிலை குலைந்து போயுள்ளது.


இதுபற்றி ஈரோடு மாவட்ட உள்ளாட்சி துறை பணியாளர் சங்க (ஏ.ஜ.டி.யு.சி.) தலைவர் சின்னசாமி கூறுகையில்,

"கரோனா பரவல் தடுப்பு ஊரடங்கு காலத்தில் உயிரை பணயம் வைத்து பணியில் ஈடுபட்டிருந்த தூய்மை பணியாளர் பாலன் அவர்கள் பணியின்போதே இறந்து விட்டார். எனவே தமிழக அரசு அவரது குடும்பத்திற்கு கரோனா காப்பீடு திட்டத்தில் அறிவிக்கப்பட்டபடி, ஐம்பது லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும். மேலும் அவரது மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று தமிழக அரசையும், ஈரோடு மாவட்ட நிர்வாகத்தையும் ஏஐடியுசி - ஈரோடு மாவட்ட உள்ளாட்சி துறை பணியாளர் சங்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்." என்றார்.

 

 


தங்கள் கால்களை கழுவி மாலைகள் அணிவித்து கெளரவப்படுத்துகிறோம் என புகைபடங்களில் போஸ் கொடுத்தால் மட்டும் போதாது. இறந்தவர் உடலை அதே குப்பை வண்டியில் கொண்டு வந்த கொடுமை ஏன் ஏற்பட்டது? வெற்று அறிவிப்பு கூடாது, இறந்த பாலன் குடும்பத்திற்கு அரசு என்ன நிவாரணம் தரப் போகிறது? என கண்ணீருடன் கேள்வி கேட்கிறார்கள் சக தொழிலாளர்கள்.

 

சார்ந்த செய்திகள்