ஈரோடு மாவட்டம் கோபி கணக்கம்பாளையம் செட்டியார் வீதியைச் சேர்ந்த மாதவன் மகன் பூபதி (45). கட்டிடத் தொழிலாளியான இவருக்கு முத்தமிழ்ச் செல்வி என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர். பூபதிக்கும், முத்தமிழ்ச் செல்விக்கும் குடும்ப வாழ்க்கையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் முத்தமிழ்ச் செல்வி சென்ற ஆண்டு நீதிமன்றம் மூலம் விவாகரத்துப் பெற்று தனது இரண்டு குழந்தைகளுடன் பிரிந்து சென்றார். இதனால் வீட்டில் பூபதி மட்டும் தனியாக வசித்துவந்துள்ளார்.
இந்த நிலையில், மனைவி குழந்தைகள் பிரிந்து சென்றதால் தொடர்ந்து மனவேதனையில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் பூபதி, நீதிமன்றத் தீர்ப்பு நம் பக்கம் இருக்கட்டும். மீன்டும் சேர்ந்து வாழ்வோம் என தனது மனைவியான முத்தமிழ்ச் செல்வியிடம் உறவினர் மூலம் பேசிப் பார்த்தார். ஆனால் சட்டப்படி பிரிந்து விட்டோம் என அவரது மனைவி உறுதியுடன் கூறிவிட்டார். மனைவியுடன் சந்தோஷமாக வாழ்ந்த வீட்டில் தனிமை, பூபதியை மிகவும் வாட்டியது. இதனால், நேற்று முன்தினம் இரவு, வீட்டில் மனைவியின் சேலையால் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்தப் பரிதாப சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பங்களாபுதூர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கணவன் இறந்த பிறகு, துக்கத்திற்கு வந்த மனைவி நீண்ட நேரம் அழுது புரண்டுள்ளார். இனி என்ன பயன் என உறவினர்கள் தேற்றியுள்ளனர்.