ஈரோடு நகர பகுதிக்குட்பட்ட கருங்கல்பாளையம், வீரப்பன்சத்திரம், சூரம்பட்டி, தாலுகா போன்ற மாநகரக் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வீடுகள் முன்பாகவும், சாலையோரங்களிலும் நிறுத்திச் செல்லப்படும் இரண்டு சக்கர வாகனங்கள் திருடு போவது அடிக்கடி நடந்து வந்தது. இதனைத் தொடர்ந்து இருசக்கர வாகனங்களைத் பறி கொடுத்தவர்கள் அந்தந்த காவல் நிலையங்களில் புகார் செய்தனர்.
தொடர்ந்து மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் தங்கதுரையின் உத்தரவின் பேரில் மோட்டார் சைக்கிள் திருட்டுக் கும்பலைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. அந்தத் தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். இதில் நகரக் குடியிருப்புப் பகுதிகளில் வசித்துக் கொண்டே வீடுகள் முன்பாகவும், சாலையோரங்களிலும் நிறுத்தி வைக்கப்படும் இரண்டு சக்கர வாகனங்களை லாவமாகத் திருடிய 7 இளைஞர்களைக் கைது செய்த காவல்துறையினர் அவர்களிடமிருந்து 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான 8 இரண்டு சக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.
இந்த வாகனத் திருட்டில் ஈரோடு கிருஷ்ணம்பாளையத்தைச் சேர்ந்த முஹம்மது நியாஜி, கருங்கல்பாளையம், சிந்தன் நகர், மூன்றாவது வீதியைச் சேர்ந்த விக்னேஷ், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஜீவா நகரைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் உள்பட 7 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். காவல்துறையினர் தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் இவர்கள் அனைவரும் தொடர்ந்து இரண்டு சக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்டு வருவதும், இவர்கள் அனைவரும் ஒரு குழுவாக இணைந்து செயல்பட்டு வருவதும் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து ஏழு பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். குழுவாக சேர்ந்து இரு சக்கர வாகனத்தைத் திருடிய இளைஞர்கள் கரோனா காலத்தில் வேலை வாய்ப்பு இல்லாததால், செலவுக்கு வழி இல்லாமல் திருட்டு வேலையில் ஈடுபட்டதாகவும் கூறியிருக்கிறார்கள். திருட வைத்து விட்டதே இந்த கொடிய கரோனா...?