திண்டுக்கல் மாநகரில் உள்ள செல்லாண்டியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கணேசன். இவரது தம்பி சரவணன் மற்றும் உறவினர் செந்தில் ஆகியோர் அந்தப் பகுதியில் வசித்து வருகின்றனர். இதில் கணேசன் மற்றும் செந்தில், செல்லாண்டியம்மன் கோவில் திருப்பணிக் குழு உறுப்பினராக உள்ளனர்.
செல்லாண்டி அம்மன்கோவில் திருப்பணி நடைபெற்று வருகிறது. அதில், கணேசன் மற்றும் செந்தில் தீவிரமாகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நேற்றுமுன்தினம் இரவு, கணேசனின் வீட்டுமுன்பு சரவணன், கணேசன், செந்தில் ஆகிய மூன்று பேரும், மோட்டார் சைக்கிள்களை நிறுத்தியிருந்தனர். நள்ளிரவில் சுமார் இரண்டு மணியளவில் மோட்டார் சைக்கிள் மூன்றும் தீப்பிடித்து எரிந்தது. வீட்டு வாசல் முன்பு நிறுத்தியிருந்த வாகனங்கள் தீப்பிடித்து எரிந்ததால், கணேசன் மற்றும் சரவணன் குடும்பத்தினர் வெளியே வரமுடியவில்லை. வீட்டில் இருந்தோர் இதைக் கண்டு சத்தம்போட, அக்கம் பக்கத்தினர் வந்து தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர்.
தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து பொதுமக்களுடன் சேர்ந்து தீயை அணைத்தனர். இருந்தாலும் மூன்று வாகனங்களும் முற்றிலும் எரிந்து நாசமாகியது. இதனுடைய மதிப்பு சுமார் நாலு லட்சம் ஆகும். இதுபற்றி தகவல் அறிந்த திண்டுக்கல் மேற்குக் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் வினோதா மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் இளஞ்செழியன் உட்பட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அதோடு மோப்பநாய் வரவழைக்கப்பட்டு குற்றவாளிகளைத் தேடி வருகிறார்கள். இப்படி நள்ளிரவில் பெட்ரோல் மூலம் நூல்சாக்கை நனைத்து, அதை டூவீலர்களில் வைத்து மர்ம நபர்கள் தீவைத்து இருப்பதின் மூலம்தான் மூன்று வாகனங்களும் எரிந்து நாசமாகியிருக்கிறது என்பது போலீஸ் விசாரணையில் தெரியவருகிறது. அதோடு, கடந்த சில தினங்களுக்கு முன்பு மாசிலாமணிபுரம் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, 10 கார்களின் கண்ணாடியை மர்மநபர்கள் உடைத்து விட்டுச் சென்றனர். அதைத் தொடர்ந்து, தற்போது மோட்டார் சைக்கிளுக்குத் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம், மக்கள் மத்தியில் பெரும் பீதியைக் கிளப்பியுள்ளது.