தமிழகம் முழுவதும் பன்றிகாய்ச்சல், டெங்குகாய்ச்சல் என வைரஸ் காய்ச்சல்கள் மூலம் பொதுமக்கள் பாதிப்படைந்து பலி எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. திருச்சியில் பன்றிக்காய்ச்சலில் இதுவரை 3 பேருக்கு மேல் இறந்து உள்ளனர். இதனால் தமிழகம் முழுவதும் ஊரக மருத்துவ பணிகள் துறையின் சார்பில் அதிரடி சோதனை நடைபெற்றது. திருச்சி மாநகராட்சி பகுதியில் டெங்குகாய்ச்சல் மற்றும் பன்றிகாய்ச்சல் குறித்து தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு கடந்த 3 நாட்களாக நடைபெற்றது.
ஊரக மருத்துவ பணிகள் கூடுதல் இயக்குநர் சுவாதி தலைமையில் மருத்துவபணிகள் இணை இயக்குநர் சம்சாத்பேகம், சுகாதாரபணிகள் துணை இயக்குநர் சுப்ரமணி, நகர்நல அலுவலர் ஜெகநாதன்,ஆகியோர் அடங்கிய அதிகாரிகள் குழுவினர் இந்த ஆய்வில் ஈடுபட்டனர்.
திருச்சி மாநகரில் சுகாதர நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், நகரின் பல்வேறு இடங்கள் மற்றும் டெங்கு பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் நேரடியாக சென்று தடுப்பு நடவடிக்கையை பார்வையிட்டனர். இதே மாதிரி தனியார் மருத்துவமனைகளுக்கும் மருத்துவகுழு ஆய்வு செய்தது. அதன் படி கீதாஞ்சலி மருத்துவனையில் ஆய்வு செய்த போது அங்கு டெங்குகொசு உற்பத்திகாரணிகள் கண்டறியப்பட்டது. மேலும் பன்றிகாய்ச்சல் குறித்த தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை, மேலும் மருத்துவகழிவுகளை தரம் பிரிக்காமல் கையாண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் உடனடியாக மருத்துவமனைக்கு 1 இலட்சரூபாய் அபராதம் விதித்தனர். மேலும் மாநகராட்சியின் சார்பாக நகர்நல அலுவலர் மூலம் நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது.
நோயை குணமாக்க மருத்துவமனைக்கு செல்லும் நிலையில் மருத்துவமனையே டெங்குகொசு உற்பத்தி காரணிகளை அழிக்காததோடு, பன்றிக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளாமல் இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. ஏற்கனவே கடந்த 2ம் தேதி திருச்சி மாநகராட்சியின் சார்பில் அனைத்து மருத்துவமனை பிரதிநிதிகளையும் வரவழைத்து பன்றிக்காய்ச்சல் தடுப்பு குறித்து விழிப்புணர்வும் எப்படி மருத்துவமனையை வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. ஏற்கனவே அறிவுறுத்தியபடி மருத்துவமனையை வைத்திருக்கிறார்களா என்பதை அறியவே இந்த அதிரடி சோதனை மேற்கொண்டனர்.