தர்மபுரி அருகே, இருதய பிரச்னை தீர பெருச்சாளியை சமைத்து சாப்பிட்ட இளம்பெண் பரிதாபமாக பலியானார்.
தர்மபுரி மாவட்டம் தொப்பூர் அருகே உள்ள மூலக்காடு கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார். இவருடைய மனைவி சரிகா (30). இவர்களுக்கு 8 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
கடந்த 5 ஆண்டுகளாக சரிகா, நெஞ்சு வலியால் அவதிப்பட்டு வந்தார். ஓரிரு இருதய மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்றும், அவருக்கு பலன் அளிக்கவில்லை. அதனால் உள்ளூரில் நாட்டு வைத்தியர்களை அணுகி இருக்கிறார். அவர்கள், பெருச்சாளியை சமைத்து சாப்பிட்டு வந்தால் இருதய பிரச்னைகள் தீரும் என்று ஆலோசனை சொன்னதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அக். 17ம் தேதியன்று, வீடு அருகே மயங்கிக் கிடந்த ஒரு பெருச்சாளியை பிடித்துக் கொன்று, சமைத்து சாப்பிட்டுள்ளார். அன்று மாலையே சரிகா திடீரென்று மயங்கி விழுந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, தொப்பூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், வரும் வழியிலேயே சரிகா உயிரிழந்திருப்பது தெரிய வந்தது. மயங்கிக் கிடந்த பெருச்சாளி விஷ உணவைத் தின்றிருக்கலாம் அல்லது சரியாக சமைக்கப்படாத பெருச்சாளி இறைச்சியே அவருடைய உடலில் விஷமாக மாறியிருக்கலாம் எனத் தெரிகிறது. மேலும் இச்சம்பவம் குறித்து தொப்பூர் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.