தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டத்தில் உள்ள தொப்பூர் கிராமத்தில் 16 வயது மதிக்கத்தக்க மூன்று மாணவர்கள் அந்தப் பகுதியில் உள்ள பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகின்றனர். இவர்கள் தங்கள் பகுதியில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள எருமப்பட்டியைச் சேர்ந்த நண்பரை பார்ப்பதற்காக கடந்த மாதம் 28ம் தேதி இருசக்கர வாகனத்தில் மேச்சேரி செக்போஸ்ட் அருகே சென்று கொண்டிருந்தனர்.
அப்போது எருமப்பட்டி வழியாக சென்ற அந்த மாணவர்களை அப்பகுதியைச் சேர்ந்த சிலர் வழிமறித்து அவர்களை குறித்து விசாரித்துள்ளனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு அடிதடியாகி உள்ளது. அதில் மூன்று மாணவர்களும் கடுமையாக தாக்கப்பட்டனர்.
ஒரு மாணவனின் இடது கால், வலது கையில் வெட்டு ஏற்பட்டுள்ளது. இன்னொரு மாணவனுக்கு வலது கை, வலது காலில் வெட்டு ஏற்பட்டுள்ளது. மற்றொரு மாணவனுக்கு வலது கால் முட்டியில் வெட்டு காயம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் மூவரும் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர்.
இதுகுறித்து தர்மபுரி டி.எஸ்.பி வினோத்குமார் அவர்களிடம் கேட்ட போது, “இது விபத்து. பொலிரோ கார் மூலமாக விபத்து நடந்துள்ளது. அந்த காரை பற்றிய விவரங்கள் தெரியவில்லை. பாதிக்கப்பட்ட மாணவர்களிடம் கொடுத்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனையிலும் இது விபத்துதான் என கொடுத்துள்ளனர்” என்று தெரிவித்தார்.
அதற்கு மேலும் சென்னையில் அரசு மருத்துவமனையில் உள்ள ஜீவா எனும் மாணவன் கூறுகையில், “எங்களை பிடித்துக் கொண்டு வெட்டினார்கள். இதை அப்படியே மூடி மறைக்க பார்க்கிறார்கள். மேலும் இதை நாங்கள் ஒத்துக்கொண்டால் தான் எங்கள் ஊரில் உள்ள 7 குடும்பமும் தப்பிக்கும். இல்லை என்றால் ஊரே எரியும் என மிரட்டினார்கள். அதனாலே இப்படி மூடி மறைக்கப்படுகிறது” என்றார்.