தமிழகத்தில் இரண்டாம் அலை காரணமாக நாளுக்கு நாள் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 26,465 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி தமிழகத்தில் 197 பேர் கரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர். அரசு மருத்துவமனைகளில் 124 பேரும் தனியார் மருத்துவமனைகளில் 73 பேரும் கரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கரோனா உயிரிழப்பு மொத்த எண்ணிக்கை 15,171 ஆக அதிகரித்துள்ளது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக, தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் மதுரவாயலில் கரோனா பாதிப்பு ஏற்பட்டு பிரிந்துவிடுவோமோ என்ற பயத்தில் முதிய தம்பதிகள் இருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மதுரவாயல் வேல் நகரைச் சேர்ந்த 70 வயது முதியவர் அர்ஜுன். அவரது மனைவி அஞ்சலாட்சி. இவர்களுக்கு திருமணம் ஆகி இதுவரை குழந்தைகள் இல்லாத நிலையில் தனியாக வசித்து வந்தனர். சில நாட்களாக இருவருக்கும் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அவர்களது வீட்டிற்கு அருகில் வசிக்கும் உறவினர் ஒருவர் இருவருக்கும் உணவு சமைத்துக் கொடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில் இன்று உணவு கொடுக்க முதியவர்கள் வீட்டிற்கு வந்தபொழுது வீடு உள்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்தது. இதனால் அதிர்ந்துபோன அவர் ஜன்னல் வழியாகப் பார்த்தபோது தம்பதிகள் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததைக்கண்டு அவர் உடனடியாக மதுரவாயல் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தார்.
இதனையடுத்து அங்கு வந்த போலீசார் தம்பதியரின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது இரண்டு நாட்களுக்கு முன்பு அஞ்சலாட்சிக்கு உடல்நிலையில் சரியில்லாததால் கரோனா பரிசோதனை செய்யப்பட்டிருந்ததும், கரோனா முடிவுக்காக காத்திருந்த நிலையில் ஒருவேளை கரோனா ஏற்பட்டு இருவரும் பிரிந்துவிடுவோமோ என்ற அச்சத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதும் தெரியவந்தது. இந்தச் சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.